கொரோனா ஒருபுறம், கருப்பு பூஞ்சை பாதிப்பு மறுபுறம் என போராடி வரும் உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில், தற்போது விவசாய நிலங்களில் வெட்டுக்கிளி தாக்குதலுக்கான வாய்ப்பும் அதிக அளவில் உள்ளது என உத்தரபிரதேச அரசு எச்சரித்துள்ளது. ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரில் வெட்டுக்கிளிகளின் கூட்டம் ஒன்று காணப்பட்டதை அடுத்து அதிகாரிகள் மாநில வேளாண்மைத்துறை தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளும் எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, பாகிஸ்தானில் இருந்து பயணித்த வெட்டுக்கிளி கூட்டங்கள், பாரதத்தில் படையெடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சேதத்தை ஏற்படுத்திச் சென்றது. பாலைவன வெட்டுக்கிளிகள் உலகின் மிக அழிவுகரமான புலம்பெயர் பூச்சியாகக் கருதப்படுகிறது. ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 80 மில்லியன் வெட்டுக்கிளிகளைக் கொண்ட திரளாக இவை இருக்கும். ஒவ்வொரு நாளும் தங்கள் சொந்த எடை வரை பயிர்களை உட்கொள்ளும். இப்படி, மில்லியன் கணக்கான வெட்டுக்கிளிகள் பறக்கும் வழியெங்கும் உள்ள அனைத்து பயிர் வகைகளையும் உண்டு அழிக்கின்றன.