நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 4 பேர் காயமடைந்தது தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழக மீனவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரியதுடன் மீனவர்களைப் பாதுகாக்க வலியுறுத்தி இருந்தார். அக்கடிதத்துக்கு பதில் அளித்துள்ள ஜெய்சங்கர், நீங்கள் அனுப்பிய கடிதம் கிடைத்தது. இந்த விவகாரம் உடனடியாக பாரதத் தூதரகம் வாயிலாக, இலங்கை அரசிடம் எடுத்துச் செல்லப்பட்டது. மீனவர்கள் மீது தாக்குதல் தொடர்பான விவரங்களை இலங்கை அரசிடம் பாரதத் தூதரகம் கோரியுள்ளது. பாரதத்தின் மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்ஹ்டிருந்தார். இதனிடையே வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, அண்ணாமலை அனுப்பியுள்ள மற்றொரு கடிதத்தில், ஆஸ்திரேலியாவின் சிட்னி பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த முகமது ரகமதுல்லா என்பவர் ஆஸ்திரேலிய காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். தாங்கள் உடனடியாக ஆஸ்திரேலியாவில் உள்ள பாரதத் தூதரகத்தைத் தொடர்பு கொண்டு, உயிரிழந்த ரகமதுல்லாவின் உடலை பாரதம் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.