ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், புத்திஜீவிகள் மாநாட்டில் உரையாற்றும் போது தெரிவித்த கருத்துகளில் சில:
சங்க ஸ்வயம்சேவகர்கள், அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பதும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவதும் அதிகாரத்தில் பங்கெடுப்பது அல்லது அவர்களது நிர்வாகத்தில் தலையிடுவதற்காக அல்ல. இந்த குற்றச்சாட்டுகள் ஊடகங்களின் உருவாக்கம்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்படுவது இல்லை. ஆர்.எஸ்.எஸ் என்பது சமுதாயத்தின் நம்பகமான நபர்களின் அமைப்பாகும். கேரளா, மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் மிகவும் துன்பப்படுகின்றனர். சமுதாயம் துன்பப்படும்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் துன்பப்படுவார்கள். இருப்பினும், தொண்டர்கள் பீதியடைந்து ஓடிவிடுவதில்லை.
சங்க ஸ்வயம்சேவகர்களின் நோக்கம், தேசத்தில் நல்ல மக்களை உருவாக்கி, தேசத்தைக் கட்டமைப்பதாகும். ஹிந்து சமூக அமைப்பால் நாட்டில் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கிய கே.பி.ஹெட்கேவார் தெரிவித்துள்ளார். முழு ஹிந்து சமுதாயத்தையும் ஒருங்கிணைப்பதே சங்கத்தின் நோக்கம்.
சங்கம் உள்ளிருந்து புரிந்து கொள்ளப்பட வேண்டும், வெளியில் இருந்து அல்ல. நாடு, சமூகம், மதத்தின் நலனுக்காக சங்கம் நல்ல வேலைகளை தொடர்ந்து செய்கிறது. அமைதியும் உண்மையும் ஹிந்து மதத்தின் சித்தாந்தம் என்பது. நாம் ஹிந்துக்கள் அல்ல என்ற பிரச்சாரம், தேசத்தையும் சமுதாயத்தையும் பலவீனப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது. ஹிந்து மக்கள் தொகை குறைந்துள்ள இடங்களில், பலவித பிரச்சனைகள் எழுந்துள்ளன.
கொரோனா தொற்றுநோய்களின் போது சங்க தன்னார்வலர்களின் தன்னலமற்ற சேவை ஹிந்துத்துவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. கம்யூனிஸ்டுகள் உட்பட பல்வேறு அரசுகளும் பல பணிகளில் சங்கத் தொண்டர்களின் ஒத்துழைப்பை நாடுகின்றன.
சங்கத்தின் ஷாகாக்களில், மக்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என கற்பிக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஹிந்துக்கள், இதுதான் ஷாகாக்களில் கற்பிக்கப்படுகிறது. சங்கத்தில் இத்தகைய பாகுபாடுகள் பார்ப்பதில்லை. ஸ்வயம்சேவகர்கள், இந்த லட்சியத்தை தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் செயல்படுத்த முயற்சிக்கின்றனர்.