இமெயில், வாட்ஸ்அப் என இணையம் சார்ந்த பல நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் இருந்தாலும் அஞ்சல் துறைக்கு என ஒரு மதிப்பு உள்ளது. அதிகாரபூர்வமான அஞ்சல்கள், அரசு தபால்கள் எல்லாம் இன்னும் அஞ்சல்துறை மூலம் தான் அனுப்பப்பட்டு வருகின்றன. கூரியர் செலவுடன் ஒப்பிடுகையில் அஞ்சல் செலவு மிகவும் குறைவு. மேலும் அஞ்சல்துறையும் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பாரதத்தில் சுமார் 1.56 லட்சம் அஞ்சல் நிலையங்கள் உள்ளன. இருப்பினும் இன்னும் ஒரு சில கிராமப் பகுதிகளில் அஞ்சல் நிலையங்கள் இல்லை. இதுபோன்ற இடங்களில் இளைஞர்கள் அஞ்சல் துறையுடன் இணைந்து சுயதொழில் செய்யும் வாய்ப்பை அஞ்சல்துரை வழங்கி வருகிறது. அஞ்சல் நிலையங்கள் தேவைப்படும் என்று நாம் கருதும் இடத்தை தேர்வு செய்து அதற்காக விண்ணப்பிக்கலாம். இதற்கு 5 ஆயிரம் ரூபாய் முதலீடு, 8ம் வகுப்பு தேர்ச்சி போன்ற தகுதிகள் இருந்தால் போதும். நாம் முகவராக சேர்ந்து அஞ்சல் நிலையத்தில் ஏஜெண்டுகளாக இருந்து தபால் தலை, கவர்கள், ரிஜிஸ்டர் தபால்கள், மணியார்டர், உள்பட அனைத்து அஞ்சலக பொருட்களையும் கிராமப்புறங்களில் விற்பனை செய்ய முடியும். விற்பனைக்கேற்ற நல்ல லாபம் தரப்படுகிறது. ஏற்கனவே சிறிய கடைகளை கிராமங்களில் நடத்தி வருபவர்களும் முகவராக சேரலாம். சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கல்லூரிகளிலும் அஞ்சலக கிளையை தொடங்கலாம். இதற்கான விண்ணப்பத்தை அஞ்சல் நிலையத்தில் பெற்று கொள்ளலாம் அல்லது இந்தியா போஸ்ட் இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் ஏற்று கொள்ளப்பட்ட பின்னர் அஞ்சல்துறையும், முகவராக வருவோரும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவேண்டும்.