“நம்பிக்கையுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் நுழைவோம்” – பிரதமர் மோடி

பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கலையும் வணக்குவதாகவும், நம்பிக்கையுடன் புதிய நாடாளுமன்றத்துக்குள் நுழைவோம் என்றும் பிரதமர் மோடி திங்கள்கிழமை தெரிவித்தார். பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில இன்று தொடங்கிய சிறப்புக் கூட்டத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக இக்கட்டிடத்தில் உரை ஆற்றினார். அப்போது பேசிய அவர், “கடந்த காலத்துடன் நம்மை இணைத்துக்கொள்ளும் வாய்ப்பு இன்று நமக்கு கிடைத்திருக்கிறது. நாம் எதிர்காலத்துக்கான புதிய நம்பிக்கையுடன் இந்தக்கட்டிடத்தில் இருந்து விடைபெறுவோம். புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு உறுதியுடனும் நம்பிக்கையுடனும் நாம் செல்வோம் என்று நான் நம்புகிறேன். இந்த நாடாளுமன்றத்தில் சேவை செய்த 7,500 உறுப்பினர்களை நினைவு கூறும் நாள் இன்று. இங்குள்ள ஒவ்வொரு செங்கலையும் நான் வணங்குகிறேன்” என்றார்.

முன்னதாக பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் சிறப்புகளைப் பற்றி தனது உரையில் பேசிய பிரதமர் மோடி, “நாம் அனைவரும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டிடத்துக்கு விடை கொடுக்க இருக்கிறோம். சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் இந்தியாவின் இம்பீரியல் லெஜிலஸ்லேட்டிவ் கவுன்சிலின் இடமாக இது இருந்தது. சுதந்திரத்துக்கு பின்னர் இது நாடாளுமன்றம் என்ற அடையாளத்தைப் பெற்றது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான முடிவு அந்நிய ஆட்சியாளர்களால் எடுக்கப்பட்டது என்பது உண்மைதான். ஆனால் நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது. இந்தக் கட்டிடத்தைக் கட்டுவதற்கான பணம், கட்டுமானத்துக்கான உழைப்பு நம்முடைய மக்களுடையது என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்.

கடந்த 75 ஆண்டுகளாக இந்த நாடாளுமன்றத்தில் (பழைய நாடாளுமன்றம்) இருந்த அனைவரும் இந்திய கலாசாரத்தை பாதுகாத்து வந்துள்ளனர். நாம் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு போனாலும், இப்பழைய நாடாளுமன்ற கட்டிடம் வரும் தலைமுறையினருக்கான உத்வேகமாக இருக்கும்” என்றார். விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை புதிய கட்டிடத்துக்கு மாற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.