வெற்றியை ஒன்றாகக் கொண்டாடலாம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 பர்மிங்காமில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 08 வரை நடைபெற உள்ளது. மொத்தம் 19 விளையாட்டுக்களைச் சேர்ந்த 141  போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்கள் பாரதத்தின் சார்பில் பங்கேற்கின்றனர், இந்த போட்டிகளில் கலந்துகொள்ள செல்லும் பாரத விளையாட்டு வீரர்கள் குழுவினருடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், அவர்களது பயிற்சியாளர்கள், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், விளையாட்டுத் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், சர்வதேச சதுரங்க தினத்தில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான பாரத அணிக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியும் தமிழகத்தில் ஜூலை 28 முதல் நடைபெறுகிறது என்பதை நினைவூட்டினார். மேலும், “நீங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும், பாரதத்தை பெருமைப்பட வைக்க வேண்டும். உங்கள் முழு திறமையுடனும், முழுமையான ஆற்றலுடனும், எந்தவித பதட்டமும் இன்றி, போர்க்குணத்துடன் விளையாட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பாரத விளையாட்டுத்துறை வரலாற்றில் மிக முக்கியமான காலகட்டம் இது, வீரர்களின் உற்சாகமும் அதிகரித்துள்ளது, பயிற்சியும் மேம்பட்டு வருகிறது. நாட்டில் விளையாட்டுக்கு உகந்த சூழலும் நன்றாக உள்ளது. நீங்கள் அனைவரும் புதிய சிகரங்களை எட்டி, புதிய சாதனைகளை படைக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் நன்கு பயிற்சி பெற்றுள்ளீர்கள், உலகின் சிறந்த வசதிகளுடன் பயிற்சி பெற்றிருக்கிறீர்கள். அந்தப் பயிற்சியையும் உங்கள் மன உறுதியையும், விருப்பத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் நேரத்தில் நீங்கள் காமன்வெல்த் போட்டிகளுக்குச் செல்கிறீர்கள். பெரிய சர்வதேச அரங்கில் விளையாட்டுப் போட்டிகளில் முதன்முறையாக நுழைபவர்களுக்கு, அரங்கம் மட்டுமே மாறியுள்ளது, ஆனால் வெற்றிக்கான மனப்பான்மையும், விடாமுயற்சியும் அப்படியே உள்ளன. மூவர்ணக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்ப்பதும், தேசிய கீதம் இசைக்கப்படுவதைக் கேட்பதும்தான் நமது குறிக்கோள். அதனால் பதற்றம் இல்லாமல், எந்தவித அழுத்தத்துக்கும் ஆட்படாமல், நல்ல மற்றும் வலுவான ஆட்டத்தின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்துங்கள்” என அறிவுரை கூறினார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விளையாட்டு வீரர் அவினாஷ் சாப்ளேயிடம், சியாச்சினில் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய அவரது வாழ்க்கை அனுபவம் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். கேரளாவைச் சேர்ந்த பாட்மிண்டன் வீராங்கனையான ட்ரீசா ஜாலியிடம், கால்பந்து மற்றும் விவசாயத்திற்கு பெயர்போன கண்ணூரில் இருந்து வரும் அவர் எப்படி பூப்பந்து விளையாட்டை தேர்வு செய்தார் என்று கேட்டறிந்தார். இப்படி அனைத்து விளையாட்டு வீரர்களிடமும் பிரதமர் பேசி அவர்களுக்கு உத்வேகமளித்தார். நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெறுவதால் அவர்களை நேரில் சந்திக்க விரும்பினாலும், அது இயலவில்லை என்று கூறிய மோடி, அவர்கள் திரும்பி வரும்போது நிச்சயம் சந்திப்பதாகவும் அவர்களின் வெற்றியை ஒன்றாகக் கொண்டாடலாம் என்றும் உறுதியளித்தார்.