சென்னையில் சின்மயா வித்யாலயா பள்ளியின் பொன்விழா ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “பாரத நாடு மட்டுமே உலகில் அனைவரும் சமம் என்ற பார்வையைக் கொண்டது. பகவத்கீதையை போன்ற சிறந்த புத்தகம் என்னை பொருத்தவரை வேறில்லை. வாழ்க்கைக்கான அனைத்தும் கீதையில் உள்ளது. உலகத்திற்கு ஒற்றுமையை உணர்த்தும் சகோதரத்துவமும், மனிதநேயமும் பாரத நாட்டில் இருந்து தோன்றியவை. ஆங்கில ஆட்சியே உயர்வானது என்ற காலணி ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியேறி, நமது பாரம்பரியம் மீது நாம் பெருமைகொள்ள வேண்டும். ஆங்கிலேயே ஆட்சி மகிழ்வானது என்று உயர் பதவியில் இருக்கும் சிலர் பேசுகின்றனர். இது பரிதாபத்திற்குரியது. ஆங்கிலேய காலத்தில் இருந்து பிரிவினை மேலோங்கியது அது இனம், மதம் என தற்போதும் தொடர்கிறது. அதனை மறந்து அனைவரும் ஒன்றே என்கிற எண்ணத்துடன் வளர வேண்டும். இனி நாம் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அடுத்த 25 ஆண்டுகளில் உலகை மகிழ்சியான உலகமாக கொண்டு செல்லும் கடமை பாரதத்திற்கு உள்ளது. புதிய கல்விக் கொள்கை புரட்சிகரமானது. சிலர் அதை அறியாமையால், படிக்காமல் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து வருகின்றனர். புதிய கல்விக் கொள்கையால் மட்டுமே பாரதத்தின் இலக்கை நாம் அடையமுடியும். இந்த இலக்கை அடைய 5 மந்திரங்களை நாம் கடைபிடிக்க வேண்டும். முழுவதும் வளர்ந்த நாடாக வேண்டும் என்ற லட்சியம் கொள்ள வேண்டும்” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.