சுதந்திரதின விழாவில் அரசியலை தவிர்ப்போம்

சுதந்திரம் 75 அமிர்த் மஹோத்சவ கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கம், இந்த கொண்டாட்டங்களின்போது அற்ப அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளது. அமிர்த மஹோத்சவத்துக்கு ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தனது ஆதரவை அறிவித்துள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்புகளால் தொடங்கப்படும் திட்டங்களில் பங்கேற்று ஆதரவளிக்குமாறு அனைத்து ஸ்வயம்சேவகர்களையும் கேட்டுக் கொண்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர் கூறியுள்ளார். மேலும், “அமிர்த மஹோத்ஸவத்தைக் கொண்டாடுவதில் யாரும் அரசியல் செய்வதில் கவனம் செலுத்த வேண்டாம். இந்த கொண்டாட்டங்களில் இருந்து தேசத்தின் கவனத்தை திசை திருப்ப முயல்வோரை புறக்கணிக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டார். முன்னதாக, சுதந்திரம் 75 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மூவர்ணக்கொடி யாத்திரையில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் வேண்டுகோளுக்கு நாடு மிகவும் சாதகமாகவும் உற்சாகமாகவும் பதிலளித்துள்ளது. என்றாலும் சில அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சிகள் இதில், ஆர்.எஸ்.எஸ்ஸை குறிவைத்து,  ‘ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் மற்றும் அதன் பிற அலுவலகங்களில் தேசியக்கொடி ஏற்றப்படுவதில்லை’ என சில தேவையற்ற கருத்துகளை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.