பா.ஜ.க கூட்டணிக்கு திருமாவளவன் வரட்டும்

கோவை காந்திபுரம் பகுதியில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை திறந்துவைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “கர்நாடக தேர்தலில் மக்கள் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம். ஆட்சி அமைக்க முடியாததற்கான காரணத்தை கட்சி ஆராயும். திராவிட நிலப்பரப்பு என்பதை வார்த்தை அலங்காரத்துக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பயன்படுத்துகிறார். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். தமிழகத்தில் கடந்த கால தேர்தல்களில் தி.மு.க எத்தனை முறை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இரட்டை இலக்கம் கூட இல்லாமல் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இருந்துள்ளனர். ஆனால், கர்நாடகாவில் பா.ஜ.கவின் வழக்கமான வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது. கர்நாடகாவில் சி.டி. ரவி தோல்வியுற்றதால் அவர் தமிழக பா.ஜ.கவை வழிநடத்த முடியாது என சொல்ல முடியாது. கர்நாடக தேர்தலில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர் பங்களிப்பை மிக சிறப்பாக செய்துள்ளார். மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பா.ஜ.கவுக்குதான் மக்கள் வாய்ப்பளிப்பார்கள். திருமாவளவன், தற்போது இருக்கும் கூட்டணியில் பட்டியல் சமூக மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதை கடந்த 2 ஆண்டுகளாக பார்த்து வருகிறார். எனவே, திருமாவளவன் சமூக நீதிக்கு எதிரான தி.மு.க கூட்டணியில் இருந்து விலக வேண்டும். பா.ஜ.க கூட்டணிக்கு வர வேண்டும். வாரிசு அரசியல், குடும்ப அரசியல்தான் திராவிட மடல் என தி.மு.கவினர் நிரூபித்து வருகின்றனர்” என கூறினார்.