அதானி குழுமம் சமீபத்தில் என்.டி.டி.வியில் 29 சதவீத பங்குகளை முதலீட்டாளர் மூலம் வாங்க உள்ளதாக அறிவித்திருந்தது. என்.டி.டி.வியின் ராதிகா மற்றும் பிரணாய் ராய் ஆகியோர் கையகப்படுத்தும் முயற்சியைத் தடுத்து நிறுத்த தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். மேலும் இந்த கையகப்படுத்துதல் காரணமாக பதறிப்போன இடதுசாரிகளும், இடதுசாரிகளின் கைகளில் அகப்பட்டுள்ள பெரும்பாலான இந்திய ஊடகங்களும் அதானி குழுமத்தை ஏதோ ஒரு தீய நிறுவனமாக சித்தரிக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமாக, இதுபோன்ற சார்பு வெறித்தனங்கள் பாரதத்தில் உள்ள ஊடகங்களிடம் மட்டும் காணப்பட்ட விஷயமல்ல. பல முக்கிய சர்வதேச ஊடக நிறுவனங்களும் இந்த கையகப்படுத்தும் முயற்சி குறித்து புலம்பி வருகின்றன. இதில் குரல் கொடுத்த முக்கிய ஊடகங்களில் ஒன்றாக அமேசான் நிறுவன முதலாளி ஜெஃப் பெசோஸ் கையகப்படுத்திய வாஷிங்டன் போஸ்ட் உள்ளது. அது வெளியிட்டுள்ள கட்டுரையில், ‘ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரரும், பிரதமர் நரேந்திர மோடியின் கூட்டாளியுமான கெளதம் அதானி, பாரதத்தின் ஊடகங்களை மாற்றியமைக்கக்கூடிய ஒரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். என்.டி.டி.விக்கு விரோதமாக முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இது ஊடக சுதந்திரத்தை நசுக்கும் செயல்’ என தெரிவித்துள்ளது. வாஷிங்டன் போஸ்ட் மட்டுமல்ல, தி கார்டியன், ராய்ட்டர்ஸ் போன்ற பல சர்வதேச ஊடக நிறுவனங்களும் இதே போன்ற கூற்றுக்களை முன்வைத்தன.
இவர்கள் குறிப்பிடும் என்.டி.டி.வி சுதந்திரமான ஊடகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்ற கூற்று இந்த வாரத்தின் சிறந்த நகைச்சுவை என்று அழைக்கப்படலாம். பல தசாப்தங்களாக என்.டி.டி.வி அப்பட்டமான போலி செய்திகளையும், அரசியல் சார்பையும் வெளிப்படுத்தி காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை திருப்திப்படுத்தி வருகிறது. இன்னும் சொல்லப்போனால், இது பாகிஸ்தானியர்களால் பாராட்டப்படும் செய்திகளை கூட தயாரித்து வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் குழுக்களால் அவர்களின் பாரத எதிர்ப்பை காட்ட இந்த செய்தி சேனல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, என்.டி.டி.வியின் 29 சதவீத பங்குகள் இத்தனை ஆண்டுகளாக ரிலையன்ஸ் குழுமத்துடன் இருந்தன. அப்போது இந்த ஊடகங்கள் வாய் திறக்கவில்லை. ஆனால் அதானி அவற்றை அம்பானியிடம் இருந்து பொறுப்பேற்றதும் அது இடதுசாரிகளின் ஊடக சுதந்திரத்திற்கான அக்கறையாக மாறிப்போனது. ஆனால், இதுகுறித்து அவர்கள் இதுவரை சரியான விளக்கமளிக்கவில்லை.
இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை குறித்து புலம்பும் இடதுசாரி ஊடகவியலாளர்களுக்கு கார்ப்பரேட் உரிமை மற்றும் பத்திரிக்கை சுதந்திரம் குறித்த கவலைகள் இருந்தால், அதானி இந்த பங்குகளை வைத்திருப்பதை விட அம்பானி அதனை வியத்திருந்த்து எப்படி சிறந்ததாக இருக்க முடியும் என்பதை முதலில் விளக்க வேண்டும்.
செய்தி ஆதாரம்: https://www.opindia.com/2022/08/adani-buying-ndtv-worries-washington-post-owned-by-amazons-jeff-bezos/