புதிய தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகள், 2021 க்கு இணங்க மத்திய அரசு சனிக்கிழமை சமூக ஊடக நிறுவனமான டுவிட்டருக்கு இறுதி நோட்டீஸை வழங்கியுள்ளது. மற்ற அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் புதிய விதிகளை செயல்படுத்த ஒப்புக்கொண்ட நிலையில் டுவிட்டர் இன்னமும் முரண்டு பிடித்து வருகிறது என்பதும் புதிய விதிமுறைகளுக்கு இணங்க சமூக ஊடக நிறுவனங்களுக்கு ஏற்கனவே 3 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2021 மே 26 முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு வந்திருந்தாலும், நல்லெண்ண அடிப்படையில் டுவிட்டர் உடனடியாக இந்த விதிகளை செயல்படுத்த கடைசி அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது, டுவிட்டர் இதனை நிறைவேற்ற தவறும்பட்சத்தில், தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 79 வது பிரிவின் கீழ் கிடைக்கும் சலுகைகள் நிறுத்தம், பாரதத்தின் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பிற தண்டனைச் சட்டங்களின்படி விளைவுகளுக்கு டுவிட்டர் பொறுப்பேற்க வேண்டும்.