முரசொலி அறக்கட்டளை நில விவகாரம் தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளதாக குற்றம்சாட்டி, தமிழக பாஜக செயலர் சீனிவாசன் புகார் அளித்திருந்தார். இந்தப் புகார் தொடர்பாக அப்போது தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணையத் துணைத் தலைவராக இருந்த எல்.முருகன் விசாரணை நடத்தினார். பின்னர் எல்.முருகன் பாஜக மாநிலத் தலைவராகப் பதவி வகித்தபோது, 2019-ல் வேலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் முரசொலி அறக்கட்டளை விவகாரம் தொடர்பாக பேசியதாக, அவருக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது. தற்போது மத்திய இணை அமைச்சராக பதவி வகித்து வரும் எல்.முருகனுக்கு எதிரான இந்த வழக்கு சென்னைஎம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிஎல்.முருகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்,இந்த வழக்கை 3 மாதங்களில் விசாரித்துமுடிக்க வேண்டுமென சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து எல்.முருகன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எல்.முருகன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, ‘‘மனுதாரர் பாஜக மாநிலத் தலைவராக பதவி வகித்தபோது முரசொலி அறக்கட்டளை அமைந்துள்ள நிலம் தொடர்பான தனது கருத்தை பேச்சுரிமையின் அடிப்படையில் வெளிப்படுத்தியிருந்தார். அதில் எந்த அவதூறும் இல்லை.இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தொடரப்பட்டுள்ளது” என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தும், இது தொடர்பாக முரசொலி அறக்கட்டளை நிர்வாகம் பதில் அளிக்க உத்தரவிட்டும், விசாரணையை 6 வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளனர்.