தமிழகத்தில் நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், ஒன்பது பேர் அடங்கிய ஒரு குழுவை நியமித்தது தமிழக அரசு. இந்த அரசாணைக்குத் தடை விதிக்கவும், ரத்து செய்யவும் கோரி தமிழக பா.ஜ.க பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது. குழு அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கு குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 5-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.