காசியில் கோமாதா கோயில்

பசுக்களை “கோமாதா” எனகூறி அதை தாயாகக் கருதி புனிதமாக வழிபடுபவர்கள் ஹிந்துக்கள். அவ்வகையில், அந்த கோமாதாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ‘கோமாதா கோயில்’ ஒன்று காசியின் கங்கை நதிக்கரையில், லமாஹி கிராமத்தில் உள்ள ஸ்ரீ ராம் ஆசிரமத்தில் கடந்த சனிக்கிழமை திறக்கப்பட்டது. மூத்த ஆர்.எஸ்.எஸ் நிர்வாகியும் முஸ்லிம் ராஷ்ட்ரிய மன்ச் புரவலருமான டாக்டர். இந்திரேஷ் குமார்  இந்தக் கோயிலைத் திறந்து வைத்துப் பேசுகையில், “இந்தக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் கோமாதாவை தரிசனம் செய்தல் மற்றும் அதனை ஸ்பரிசம் செய்வதன் மூலம் இரட்டைப் பலன்களைப் பெறுவார்கள். கோயிலில் உள்ள இரண்டு பசுக்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை ‘ஆரத்தி’ மற்றும் ‘திலகம்’ வைத்து வழிபாடு செய்யப்படும். உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் பாரதத்தின் நாட்டுப் பசுக்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். புற்றுநோய் போன்ற சிக்கலான நோய்களுக்கும் கோமியம் சிறந்த நன்மை பயக்கும்” என்றார். ஸ்ரீ ராம் பந்த் தலைமை அர்ச்சகர் டாக்டர் ராஜீவ் ஸ்ரீவஸ்தவா, “கோயில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்களுக்காக திறந்திருக்கும். நாங்கள், வாழும் கோமாதாவை வழிபடுவதை ஊக்குவிக்க விரும்புகிறோம். எனவே இந்த கோயிலில் கடவுள் சிலைகள் ஏதுமில்லை. தற்போது இங்கு கிர் மற்றும் சாஹிவால் இனத்தை சேர்ந்த இரண்டு பசுக்கள் வைக்கப்பட்டுள்ளது. அதையே கோமாதாவாக இங்கு வணங்குகிறோம். பசுவை வளர்க்க முடியாதவர்கள் இந்த கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து, அவற்றை தொட்டு வணங்கலாம். இது மக்களுக்கு மன அமைதி மற்றும் உடல் உபாதைகளில் இருந்து விடுபட உதவும். கோயிலில் இரண்டு அறைகள் உள்ளன. அதில்தான் கோமாதா தங்குவாள். வருங்காலத்தில், கோயிலுக்கு அதிக பக்தர்கள் வருகையில் மேலும் பல கோமாதாக்களை சேர்த்து  பெரிய கோயிலை கட்டுவோம்” என்றார். கோமாதா கோயிலின் பொறுப்பாளர் நஸ்னீன் அன்சாரி கூறுகையில், பாரதத்தின் பூர்வீக பசுக்களை மேம்படுத்துவதற்கும், வளர்ப்பதற்கும் பல்வேறு நாட்டு அரசுகள் ஊக்கமளிக்க வேண்டும். கோமாதா கோயிலில் கோமியம் தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும்” என்றார். கோவிலுக்கு நியமிக்கப்பட்ட கோசேவகர்களில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.