நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளுக்கு உதவும் வகையில், பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டம் மத்திய அரசால் துவங்கப்பட்டது. கடந்த 2019 பிப்ரவரியில் தொடங்கிய இத்திட்டம் தற்போது 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ. 6,000, 4 மாதங்களுக்கு ஒரு முறை என 3 தவணைகளாக நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளின் வங்கி கணக்கிலும் நேரடியாக செலுத்தப்படுகிறது. முதலில் இத்திட்டம் 2 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காகத் தொடங்கப்பட்டது. பின்னர் 2019ல் முதல் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தால் விவசாயிகள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர். 2022 பிப்ரவரி 22 வரை இத்திடத்தின் பயன்கள் 11.78 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ. 1.82 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகள் கைப்பேசி செயலி, பி.எம் கிசான் இணையதளம் மூலமாகவும் அல்லது பொதுச் சேவை மையங்களுக்குச் சென்றும் சுயமாகவே பதிவு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் பயனாளிகள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, முழுமையான குறைதீர்ப்பு முறை உருவாக்கப்பட்டுள்ளது.