துாய்மை, நீடித்து உழைக்கும் திறனுக்கு சான்றாக விளங்கும் காதி, கதர் பொருட்கள், பிரதமர் மோடியின் தொடர் முயற்சியால் பாரதத்தில் மட்டுமல்ல சர்வதேச அரங்கிலும் நல்ல பெயர் பெற்று அதிகமாக விற்பனை ஆகி வருகிறது. உலகிலேயே கையால் நெசவு செய்யப்படும் ஒரே துணியாக காதி விளங்குகிறது. இந்நிலையில், உலக அளவில் முன்னணியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்த ஆடை தயாரிப்பு நிறுவனமான படகோனியா, ஆடைகளை தயாரிப்பதற்கு காதி துணிகளை பயன்படுத்துகிறது. இதற்காக குஜராத்தின் ஆமதாபாதில் உள்ள ‘அரவிந்த் மில்ஸ்’ நிறுவனத்திடம் இருந்து ரூ. 1.08 கோடி மதிப்பில் 30 ஆயிரம் மீட்டர் காதி துணியை கொள்முதல் செய்துள்ளது. படகோனியாவைச் சேர்ந்த ஒரு குழு, ராஜ்கோட்டின் கோண்டலில் உள்ள உத்யோக் பார்தி என்ற காதி நிறுவனத்திற்குச் சென்று காதி டெனிம் உற்பத்தி செயல்முறையை பார்வையிட்டனர்.