கேரளாவின் காசர்கோடு மற்றும் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த சேர்ந்த 14 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர், அப்துல் ஹசீம் தலைமையில் ‘இஸ்லாத்தைப் படிக்க’ ஏமன் நாட்டிற்குள் நுழைய முயன்றனர். இதற்காக இக்குடும்பம் ஓமனில் உள்ள சலாலாவை அடைந்து அங்கிருந்து ஏமனுக்குள் நுழைய முயன்றது. அவர்களை ஏமன் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். பாரதம் வந்த அவர்களை குடிமைப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். ஏமன் ஆசியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. அங்கு நடந்து வரும் கிளர்ச்சி, உள்நாட்டுப் போரால் அந்த நாடு நீண்ட காலமாக போராடி வருகிறது. இருப்பினும், இஸ்லாத்தை படிக்க விரும்பும் பலர் ஏமனை விருப்ப இடமாக பார்க்கிறார்கள். தற்போதைய நெருக்கடியையும் பொருட்படுத்தாமல், ஏமன் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு மதப் படிப்பு மாணவர்களுக்கு இன்னும் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த 2015ல் ஏமனில் ஏற்பட்ட போரின்போது அங்கிருந்து 4,500க்கும் மேற்பட்ட நமது குடிமக்கள், பல வெளிநாட்டினரை ‘ஆபரேஷன் ராஹத்’ மூலம் நமது மத்திய அரசு வெற்றிகரமாக மீட்டு வந்தது. அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் மறைந்த சுஷ்மா சுவராஜ். இந்த நடவடிக்கைக்கு தலைமை வகித்தவர் ஜெனரல் வி.கே.சிங். பிரதமர் நரேந்திர மோடி, சௌதி அரேபிய மன்னரிடம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து இந்தியர்கள் பாதுகாப்பான பாதையில் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு நாளும் இதற்காக இரண்டு மணி நேரம் போர் நிறுத்தப்பட்டது. அவர்களை வெளியேற்ற வசதியாக விமானங்கள் அனுமதிக்கப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.