கேரள மாநிலம், கொட்டாரக்கரை அரசு மருத்துவமனையில் போதைக்கு அடிமையான சந்தீப் என்பவரால், இளம் பெண் மருத்துவர் வந்தனா தாஸ் கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில், அவருடைய உடலில் 11 காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது, தலையில் மூன்று முறையும், முதுகில் 6 முறையும் அவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர் வந்தனா தாஸின் படுகொலையைக் கண்டித்து, கேரளா முழுவதும் மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சுகாதாரப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றுமாறு கேரள முதல்வர் பினரயி விஜயனுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே, மருத்துவர் வந்தனா தாஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு கேரள உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய நீதிபதிகள், “நாட்டில் வேறு எங்கும் நடைபெறாத சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. மருத்துவர்களுக்குகு பாதுகாப்பு அளிக்க முடியவில்லை என்றால் அரசு மருத்டுவமனைகளை மூடி விடுங்கள். பாதுகாப்புக்கு சென்ற காவலர்களின் கையில் துப்பாக்கி இல்லையா? சம்பவம் நடந்த போது காவலர்கள் அந்த இடத்தில் இருந்த போதும், அதனை தடுக்க முடியவில்லையா?. அவர்கள் நினைத்திருந்தால் மருத்துவரை காப்பாற்றி இருக்கலாம். இந்த சம்பவம் தொடர்பாக மாநில டி.ஜி.பி நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். கொட்டாரக்கரை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கொலை நடந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.