காஷ்மீர் ஒற்றுமை தினம் எனும் காமெடி

பாரதத்தின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீரை பிரித்து அதனை தனது நாட்டுடன் இணைக்க வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு பாகிஸ்தான் அரசு பிப்ரவரி 5ம் தேதியை காஷ்மீர் ஒற்றுமை தினம் என்று அனுசரித்து வருகிறது. காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு இந்த தினத்தில் பாகிஸ்தானில் பல்வேறு ஆர்ப்பாட்டங்களை திட்டமிட்டு நடத்தி வருகிறது. இந்நிலையில், ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ என கூறி பாரதத்துக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் அந்த தினத்தில் சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தி வருவதை மத்திய உளவுத் துறைகள் கண்டுபிடித்து அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. அதன்படி, பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளிநாடுகளில் உள்ள (தங்கள் நாட்டின் தூதரகங்களுக்கு ரகசிய தகவலை அனுப்பியது. அதில், வெளிநாடுகளில் உள்ள அனைத்து பாகிஸ்தான் தூதரகங்களும் காஷ்மீர் ஒற்றுமை தினம் தொடர்பாக அறிக்கைகள், டுவிட்டர் பதிவுகள் வெளியிட வேண்டும், பாரதத்துக்கும் மத்திய அரசுக்கும், அதன் ராணுவத்திற்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவர்கள் கருத்துக்களை பதிவிட்டனர்.

ஒருபுறம், பாகிஸ்தான் மக்கள் தற்போது தங்களது அன்றாட உணவு, எரிபொருள், மின்சாரம், வேலைவாய்ப்புக்கும் அல்லாடி வருகின்றனர். மறுபுறம் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் பயங்கரவாதங்கள், அரசியல்வாதிகள், ராணுவத்தினரின் ஊழல்கள், மோசமான நிதிநிலை, உதவாத நட்பு நாடுகள் என ஒரு வாழும் நரகமாக மக்களுக்கு மாறிவருகிறது பாகிஸ்தான். பலஉலக நாடுகளும், பாகிஸ்தான் விரைவில் மூன்றாக அல்லது ஐந்தாக உடையும் என கருதி வருகின்றன. இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “இந்திய அடிமைத்தனத்தில் இருந்து சுதந்திரம் பெறும் கனவு நனவாக, இந்தியாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்புக்கு எதிராக ஜம்மு காஷ்மீரின் மக்கள் ஓய்வின்றி போராடி கொண்டிருக்கின்றனர். அவர்கள் தங்களது தியாகங்களால் சுதந்திர தீப்பந்தத்தினை ஏந்தி கொண்டிருக்கின்றனர். அவர்களது கனவு விரைவில் ஒளி விடும் நாளை காணும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. காஷ்மீரின் சகோதர, சகோதரிகளுக்கும் ஆதரவை வெளிப்படுத்த ஒட்டுமொத்த பாகிஸ்தானும் ஒன்றிணைந்து வந்திருக்கிறது. சுய தீர்மானத்திற்கான உரிமைக்கு ஐ.நா ஒப்புதல் அளித்த விஷயத்திற்கான போராட்டத்தில் இந்திய ஆக்கிரமிப்பால் தொடர்ந்து நசுக்கப்பட்டு, உறுதியற்று போனவர்களுக்கு ஆதரவு வழங்குகிறோம்” என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், நாங்கள் பாடம் கற்று கொண்டோம், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த போகிறேன் என்று பேசியவர் இதே ஷெபாஸ் ஷெரீப். பெஷாவர் குண்டு வெடிப்பு சம்பந்தமாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “நான் நீண்ட நேரம் பேச போவதில்லை. தொடக்கத்தில் இருந்து நாம் பயங்கரவாதத்திற்கான விதைகளை விதைத்தோம். இந்த தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்திய நபர், இறை வணக்கத்தின்போது, தொழுகை நடைபெறும் பகுதியில் முன்னால் நின்று கொண்டிருந்தார். இந்தியா அல்லது இஸ்ரேல் நாடுகளில் கூட இறைவனை வழிபடும்போது யாரும் கொல்லப்படுவதில்லை. ஆனால், அது பாகிஸ்தானில் நடந்துள்ளது” என்று கூறினார். பாகிஸ்தான் அரசியல்வாதிகள் இன்னமும் திருந்தவில்லை, தங்கள் தவறுக்காக வருந்தவில்லை என்பதையே இது வெளிக்காட்டுகிறது. இந்த சூழலில், நேற்று பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் காவல்துறை தலைமை அலுவலகம் அருகே பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் பலர் படுகாயமடைந்துள்ளனர், சிலர் இறந்துவிட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.