கடந்த வருடம் அக்டோபர் மாதத்தில் பெரம்பலுார் மாவட்டம் சிறுவாச்சூரில் உள்ள மலை கோயிலான செல்லியம்மன், பெரியசாமி கோயிலை சில மர்மநபர்கள் தாக்கி அங்குள்ள சிலைகளை உடைத்தனர். இதனை மீண்டும் புதுப்பிக்க இணையதளம் வழியாக மக்களிடம் பணம் வசூலித்து சேகரித்து வந்தார் கார்த்திக் கோபிநாத். பிரபல யூடியூபரான இவர் மீது, கடவுளின் பெயரை கூறி, வசூலில் ஈடுபட்டு மோசடி செய்துவிட்டதாக காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்று தரப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஆவடி காவல்துறையினர், இவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, தனது டுவிட்டர் பதிவில், “தி.மு.கவினர் கார்த்திக் கோபிநாத் மீது முற்றிலும் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவது கண்டனத்திற்குரியது. தேசியவாதியான கார்த்திக் கோபிநாத்துக்கு தமிழக பா.ஜ.க துணை நிற்கும். அவரின் அப்பாவிடம் அவருக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளேன்” பதிவிட்டுள்ளார். மூத்த பா.ஜ.க தலைவர் சுப்ரமணியம் சுவாமி, “ஆவடி காவல் நிலைய காவல்துறையினர், கார்த்தி கோபிநாத், கோயிலை மராமத்து செய்ய பொதுமக்களிடம் பணம் வசூலித்ததற்காக அவர் துன்புறுத்த ஆரம்பித்துள்ளது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இது அரசியல் சாசனத்தின் 25வது பிரிவை மீறுவதாகும் எனவே காவல்துறைக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வேன்” என தெரிவித்துள்ளார். இதைத்தவிர, பா.ஜ.க தலைவர்களான ஹெச். ராஜா, எஸ்.ஆர் சேகர் உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கார்த்திக் கோபிநாத் சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்த போது அவரை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.