முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் எம்.பியுமான ப.சிதம்பரம், அவரின் மகன் கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை, சென்னை, மும்பை, டெல்லி, பஞ்சாப் போன்ற இடங்களில் இவ்விருவருக்கும் தொடர்புடைய 10 இடங்களில் நடைபெற்றது. பஞ்சாப் மாநிலம், மானசாவிலுள்ள வேதாந்தா நிறுவனத்துக்குச் சொந்தமான மின் நிலையத்தில் பணியாற்ற 200க்கும் மேற்பட்ட சீனர்களுக்கு விசாக்கள் வழங்க சட்டவிரோதமாக ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக கார்த்தி சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ அதிகாரிகள் வழக்கு பதிவுசெய்தனர். மேலும் இதில், கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமன் முக்கிய நபர் என சி.பி.ஐ அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்நிலையில், விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரராமனை சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று கைது செய்துள்ளனர்.