கர்நாடகா காப்பாற்றிய 20,000 பசுக்கள்

கர்நாடகாவில் பசுவதைத் தடைச் சட்டம் அமலுக்கு வந்ததில் இருந்து கர்நாடக அரசு இதுவரை 20,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் சட்டவிரோதமாக கொல்லப்படுவதில் இருந்து காப்பாற்றியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற முஸ்லிம்களின் பண்டிகையான பக்ரீத்தின்போது, பண்டிகைக்காக பசுக்கள், எருதுகள் மற்றும் எருமைகளை பலியிடுவதைத் தவிர்க்குமாறு கர்நாடக மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பிரபு சௌஹான் வேண்டுகோள் விடுத்தார். பசுவதைத் தடைச் சட்டத்தை மீறும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். காவல்துறை அறிக்கையின்படி, பக்ரீத்தின்போது சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்துதல், வெட்டுதலை தடுக்க, மாநிலம் முழுவதும் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டது. பெங்களூரு மாநகராட்சியும் தாலுகா வாரியாக பணிக்குழுக்களை அமைத்தது. இந்த நடவடிக்கையின்போது சட்டத்தை மீறிய சுமார் 67 பேர் கைது செய்யப்பட்டனர், 707 கால்நடைகள் காப்பாற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் பிரபு சௌஹான், ”பசுவதைத் தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டதில் இருந்து, விலங்குகள் நலவாரியம் அமைத்தல், கால்நடை உதவி மையம் அமைத்தல், 400 கால்நடை மருத்துவர்கள் நியமனம், 250 கால்நடை ஆய்வாளர்கள் நியமனம், கோமாதா கூட்டுறவுச் சங்கம், புண்யகோடி தத்தெடுப்புத் திட்டம், சுயசார்பு கோசாலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட பசுக்கள் மற்றும் தடை செய்யப்பட்ட விலங்குகளை கொன்றதற்காக இதுவரை 900க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சாண எரிவாயு உற்பத்தி செய்வதற்காக விவசாயிகளிடம் இருந்து மாட்டு சாணத்தை ஒரு கிலோ ரூ. 2க்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.