பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், நமது நாட்டின் பெயரை ‘இந்தியா’ என்பதற்குப் பதிலாக ‘பாரத்’ என்று மாற்ற வேண்டும் என தனது சமூக வலைத்தள பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். அதில், ‘பிரிட்டிஷார் நமக்குக் கொடுத்த ‘இந்தியா’ என்ற பெயர் அடிமைப் பெயராக உள்ளது. எனவே இதை மாற்றி நமது நாட்டின் பழைய பெயரான ‘பாரதம்’ என்பதையே வைக்க வேண்டும். நாம் அடிமைப் படுத்தப்படுவதற்கு முன்னதாகவே கலாச்சாரம் மிகுந்தவர்களாகவும், நாகரீகம் மிக்கவர்களாகவும் இருந்தோம். பாரதம் அதன் பண்டைய ஆன்மிகம், ஞானத்தில் வேரூன்றியிருந்தால் மட்டுமே உயர முடியும். அதுவே நமது மிகப் பெரிய நாகரிகத்தின் ஆன்மாவாக விளங்கக்கூடும். நகர்ப்புற வளர்ச்சியில் நாம் உயர்ந்தாலும், மேற்கத்திய உலகின் மலிவான நகலாக இல்லாமல், வேதங்கள், பகவத் கீதை மற்றும் யோகாவில் ஆழமாக வேரூன்றி இருந்தால், உலகின் மிகப்பெரிய நாடாக வெளிப்படுவோம்’ என்று கூறியுள்ளார்.