தமிழ் மொழியை வளர்க்க உழைத்த ஏராளமான அறிஞர்களுள் முத்தமிழ் காவலர் என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளையும் ஒருவர். எழுத்தாளர், பேச்சாளர், சிந்தனையாளர், ஏற்றுமதி வணிகர், தமிழறிஞர், அரசியலர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம், ‘சித்த மருத்துவத்துக்கு உயிர் கொடுத்த மாமனிதர்’ என்று போற்றப்படுபவரும்கூட.
தமிழ் மொழிக்காக தனது வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கி.ஆ.பெ.விஸ்வநாதம் பிள்ளை, தமிழ் படிப்பதற்காகப் பள்ளி சென்றதில்லை. தமிழ் இலக்கியங்களை வெறும் பாடப்புத்தகமாக மட்டும் பார்க்காமல், அவை எப்படியெல்லாம் தினசரி வாழ்க்கைக்குப் பாடமாகவும் பாலமாகவும் இருக்கிறது என்பதைச் சொல்ல தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். அவருடைய படைப்புகள் அனைத்துமே பாமரருக்கும் புரியும்படி எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அவர் எழுதிய கதைகள், கட்டுரைகள், திருக்குறள் விளக்கங்கள், சங்க இலக்கியங்களின் இன்றைய தேவைகள் போன்றவையெல்லாம் காலத்துக்கேற்ற உதாரணங்களுடன் பள்ளி மாணவச் செல்வங்களும் புரிந்துகொள்ளும்படி படைக்கப்பட்டுள்ளன.