மேற்குவங்க அரசின் பள்ளிப் பணியாளர் தேர்வாணையத்தால் உருவாக்கப்பட்ட சூப்பர்நியூமரரி பணியிடங்கள் தொடர்பான வழக்கில் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் கேள்விகளுக்குப் பதிலளிக்க மாநிலக் கல்விச் செயலர் மணீஷ் ஜெயின் நீதிபதியின் முன் ஆஜரானார். நீதிமன்றத்தால் பணியிடங்கள் பறிக்கப்பட்ட சட்ட விரோதமாக வேலைவாய்ப்பைப் பெற்றவர்கள், பணியில் தொடரலாம் என்றும் ஆசிரியர் பணியிடங்கள் பறிக்கப்பட்ட தவறான நபர்களை காப்பாற்ற அவர்களுக்கவே சட்டவிரோதமாக சூப்பர் நியூமரரி பணியிடங்களை உருவாக்கவும் கல்வித்துறை ஆணையத்திற்கு உத்தரவிட்டது யார்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அத்தகைய முடிவை எடுக்குமாறு கல்வி அமைச்சர் பிரத்யா பாசு தனக்கு உத்தரவிட்டதாக மணீஷ் ஜெயின்` கூறினார். மேலும், அரசின் அதிகாரவர்க்கம், சட்டப் பிரிவு மற்றும் வழக்கறிஞர்கள், அட்வகேட் ஜெனரல் எஸ்.என். முகர்ஜி ஆகியோர் இந்த முடிவை ஆமோதித்திருந்தனர். இந்த முடிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது எனவும் கூறினார். இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “சட்டவிரோதமாக வேலை வாங்கியவர்களைக் காப்பாற்ற அரசு எப்படி முடிவெடுக்க முடியும், நீதிமன்ற உத்தரவை புறக்கணித்துவிட்டு அரசு எப்படி சொந்தமாக முடிவெடுக்க முடியும்? “அப்படியானால், ஜனநாயகம் சரியான நபர்களின் கைகளில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அனைத்து மாநில அமைச்சர்களுக்கும் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்புவேன். அவர்கள் இந்த நீதிமன்றத்திற்கு வந்து எனது கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். வேறு சில அரசியல் கட்சிகளும் இதனால் பாதிக்கப்படும் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. இந்த சம்பவம் வரலாற்றை உருவாக்கும் . நீதித்துறை எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் பார்ப்பார்கள். திருணமூல் காங்கிரஸ் கட்சியின் அங்கீகாரத்தையும் அதன் சின்னத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை கேட்டுக் கொள்கிறேன் ”என்று கூறினார்.