மத்திய அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு விழா

ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்க வேண்டுமென்ற அரசின் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் நாடு முழுவதும் 45 இடங்களில் 71,000க்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வழங்கினார். காணொலிக் காட்சி மூலம் பணி நியமன ஆணைகளைப் பெற்றவர்களிடையே அவர் உரையாற்றினார். இதன் ஒரு பகுதியாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் சுமார் 1,000 பேருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. சென்னையில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில், மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அஞ்சல் துறை, ரயில்வே அமைச்சகம். சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்ட 247 பேருக்கு அவர் பணி நியமன ஆணைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து அரசின் ஓர் அங்கமாக மாறுவது குறித்த தங்களின் எண்ணங்களையும், அந்தந்த துறைகளில் தங்களின் பங்குகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும், தங்கள் எதிர்பார்ப்புகளையும் நியமனதாரர்கள் பகிர்ந்து கொண்டனர். இதேபோல, திருச்சியில் நடைபெற்ற விழாவில், மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி பங்கேற்று 238 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார். மதுரையில் நடைபெற்ற பணிநியமன ஆணைகள் வழங்கும் விழாவில், மத்திய சுற்றுலா, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, மற்றும் நீர் வழிப் பாதைகள் துறை இணையமைச்சர் ஸ்ரீபத் நாயக் பங்கேற்று 200 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார். கோவையில் நடைபெற்ற விழாவில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜான் பிர்லா 371 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.