”சர்வதேச அளவிலான பிரச்னைகளில் மற்றவர்களுக்கு ஒரு நீதி, தங்களுக்கு ஒரு நீதி என செல்வாக்குள்ள நாடுகள் இரட்டை வேடம் போடுகின்றன,” என, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கத்திய நாடுகளை குற்றஞ்சாட்டினார். ஐ.நா.,வுக்கான இந்தியக் குழு, ‘அப்சர்வர் ரிசர்ச் பவுண்டேஷன், ரிலையன்ஸ் பவுண்டேஷன்’ உள்ளிட்டவை இணைந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ‘உலகின் தென் பகுதியின் குரல்’ என்ற தலைப்பில் கலந்துரையாடல், கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இதில் பங்கேற்ற நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று பேசியதாவது தற்போது உலகம் முழுதும் உள்ள முக்கியமான பிரச்னைகள், கடன், நீடித்த வளர்ச்சி இலக்குகள், பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு, பாலின பேதம், டிஜிட்டல் அணுகல், ஊட்டச்சத்து என, பல உள்ளன.
கொரோனாவுக்குப் பின் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்குப் பின், இந்தப் பிரச்னைகளில் உலக நாடுகள் அதிக கவனம் செலுத்தவில்லை. உலகின் அதிக செல்வாக்கு உள்ளதாக கூறப்படும் நாடுகள், உலக நியதிக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதற்கு தயாராக இல்லை. ஆனால், மற்ற நாடுகளை நிர்ப்பந்தப் படுத்துகின்றன. இந்த செல்வாக்கை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன. அரசியல் நெருக்கடிகளே மேலோங்கி உள்ளன. மாற்றங்களுக்கு தயாராவதில், இந்த ஆதிக்க, செல்வாக்குள்ள நாடுகள் இரட்டை வேடம் போடுகின்றன. ‘குளோபல் சவுத்’ எனப்படும் உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகள் இத்தனை ஆண்டுகளாக நசுக்கப்பட்டு வந்தன அல்லது குரல் எழுப்ப முடியாமல் இருந்தன.
இதை முறியடிக்கும் முயற்சியில், உலகின் தென்பகுதியின் குரல் என்ற முயற்சியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஐ.நா.,வின் பாதுகாப்பு கவுன்சில் உட்பட பல உதாரணங்களை இதற்கு கூறலாம். இந்த அதிகாரம் உள்ள நாடுகள் பேசுவது ஒன்று, செயல்படுத்துவது வேறாக உள்ளது. மாற்றம் ஒன்றே மாறாதது.
உலகின் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப, அனைத்து தரப்பு நாடுகளுக்கும், மக்களுக்கும் வாய்ப்பு தரும் வகையில், பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்டவற்றில் மாற்றங்கள் தேவை. உலகின் தென்பகுதியில் உள்ள நாடுகளைச் சேர்ந்த மக்கள் பாரம்பரியமாக, கோதுமைக்கு பதிலாக சிறுதானியங்களையே சாப்பிட்டு வந்தனர்.
ஆனால், மேற்கத்திய நாடுகளின் வணிக நோக்கத்துக்காக கோதுமை திணிக்கப்பட்டது. ஜி – 20 மாநாட்டில் இதை நாம் முறியடித்தோம். சிறுதானிய உணவுகளே அதில் பரிமாறப்பட்டன.
மற்றவர்களின் பாரம்பரியம், மரபுகள், இசை, கலாசாரம், இலக்கியம் உள்ளிட்டவற்றையும் மதித்து நடக்க வேண்டும். இதைத்தான், குளோபல் சவுத் வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் பேசினார்.