பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், ஒரு படப்பிடிப்பிற்காக ஹங்கேரிக்கு செல்ல தனது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்தார். அவருக்கு எதிரான கிரிமினல் வழக்குகளை மேற்கோளிட்டு பாஸ்போர்ட் அலுவலகம், புதுப்பித்தலை தாமதப்படுத்தியது. இதனையடுத்து அவர் நீதிமன்றம் சென்றார். உடனடியாக பரிசீலித்து பாஸ்போர்ட் வழங்க நீதிமன்றம் கூறியது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தன்னைப் பற்றி கங்கனா கூறிய கருத்துக்கள் தொடர்பாக, அவர் மீது அவதூறு புகாரை தான் அளித்ததாகவும், குற்றவியல் நடவடிக்கைகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறி பாஸ்போர்ட் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டார். முன்னதாக, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இறந்ததைத் தொடர்ந்து கங்கனா சில கருத்துகளை தெரிவித்தார். அதில் ஒன்றாக, ‘நாத்திகர் என்று பாசாங்கு செய்யும் ஜாவீத் அக்தரைப் போன்றவர்கள், உண்மையில், இஸ்லாத்திற்கு ஆதரவானவர்கள். முஸ்லிம்களையும் அவர்களுக்கு ஆதரவானவர்களையும் மட்டுமே தேர்ந்தெடுத்து ஊக்குவிக்கின்றனர்’ என்று கூறினார். இதனை அடுத்தே ஜாவீத் அக்தர் இந்த பழிவாங்கும் செயலில் ஈடுபட்டுள்ளார் என கூறப்படுகிறது.