விநாயகர் சதுர்த்திக்கு ஜமாத் அனுமதி?

கோவை உக்கடம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பிள்ளையார் சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி கேட்டு பெரியகடை வீதி காவல் நிலையத்தில் மகாலட்சுமி என்பவர் மனு கொடுத்தார். இதற்கு, அப்பகுதியில் முஸ்லிம்கள் அதிகம் பேர் வசிப்பதால் காவல்துறையினர் அனுமதி வழங்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மகாலட்சுமி வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்க முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதத்தினரும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவே, அனுமதி வழங்க வேண்டும் என முறையிட்டார். இதனையடுத்து ‘மனுதாரர் குடியிருப்பு பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஆட்சேபனை இல்லை என ஐமாத் அமைப்பினரிடம் இருந்து கடிதத்தை பெற்று காவல்துறையினர் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி கடிதம் தரும் பட்சத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும். அதற்குரிய பாதுகாப்பை வழங்கவேண்டும். நிகழ்ச்சியை கொண்டாட மட்டுமே அனுமதி வழங்ககப்படுமே, தவிர சிலையை ஊர்வலம் எடுத்துச் செல்லக் கூடாது’ என நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பு ஹிந்துக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாம் இந்தியாவில்தான் இருக்கிறோமா அல்லது பாகிஸ்தானில் வசிக்கிறோமா என கேட்டு ஆதங்கம் தெரிவித்துள்ளனர். மேலும், ஹிந்துக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் அதிக சப்தமாக நமாஸ் ஓதுவதற்கு இனி ஹிந்துக்களிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று அரசோ, நீதிமன்றமோ கூறுமா? என கேள்வி எழுப்பியுள்ளனர்.