மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேதலைமையில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா வளாகத்தில் நடைபெற்ற தசரா மேளாவில் சிவசேனா கட்சியை தோற்றுவித்த பால் தாக்கரேவின் மூத்த மகனும் உத்தவ் தாக்கரேவின் மூத்த சகோதரருமான ஜெய்தேவ் தாக்கரே கலந்து கொண்டார். உத்தவ் தாக்கரேவின் மறைந்த சகோதரர் பிந்துமாதவ் தாக்கரேவின் மகன் நிஹார் தாக்கரே ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டே குழுவில் இணைந்துள்ளார். மேலும் இந்த பேரணியில் ஸ்மிதா தாக்கரேவும் கலந்து கொண்டார். இது மகாராஷ்டிர அரசியலில் தற்போது பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது. அப்போது பேசிய ஜெய்தேவ் தாக்கரே, “நாங்கள் தாக்கரேக்கள் ஒருபோதும் எழுதிவைத்து பேசுவதில்லை. ஏக்நாத் எனக்கு மிகவும் பிடித்தவர். தற்போது முதல்வராகி விட்டார். நான் அவரை ஏகநாதராவ் என்று அழைக்க வேண்டும். கடந்த ஆறு நாட்களாக நான் ஷிண்டே குழுவில் சேர்ந்திருக்கிறேனா என்று தொலைபேசி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், குழுவில் சேருவதில் நம்பிக்கை இல்லாத தாக்கரே நான் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏக்நாத் ஷிண்டே சில விஷயங்களில் ஒரு நல்ல நிலைப்பாட்டை எடுத்துள்ளார். எனக்கு அது பிடித்திருந்தது. அப்படிப்பட்ட சுறுசுறுப்பான நபர் மகாராஷ்டிராவுக்குத் தேவை. எனவே, அவரது அன்பின் பொருட்டு, நான் இங்கு வந்துள்ளேன். மாநிலத்தில் மீண்டும் தேர்தலை நடத்துங்கள். மாநிலத்தில் மீண்டும் ஷிண்டே ஆட்சி அமையட்டும். ஏக்நாத் என்ற பெயருடன் நமக்கு ஒரு வரலாறு உள்ளது. ஏக்நாத் என்ற ஒரு துறவி இருந்தார். பின்னர், சமீபத்தில், மற்றொரு ஏக்நாத்தை (ஏக்நாத் காட்சே) பார்த்தோம். அவரது தோழர்கள் அவரது அரசியல் வாழ்க்கையை முடித்தனர். இந்த ஏக்நாத்தை யாரும் இப்போது தனிமைப்படுத்த வேண்டாம்” என கூறினார்.