அக்.10-ம் தேதிக்குள் கனடா தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற இந்தியா வலியுறுத்தியதாக தகவல்

வரும் அக்.10-ம் தேதிக்குள் கனடா தனது தூதரக அதிகாரிகளை திரும்பப்பெற வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் 18-ம் தேதி கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டை முன்வைத்தார். கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது. மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக இந்திய அரசு, இந்தியாவில் உள்ள கனடா நாட்டு தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது. இதனாலேயே கனடாவுக்கு இந்தியாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அக்.10 க்குள் இந்தியாவில் இருக்கும் கனேடிய அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்று இந்தியா கூறியிருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்தியாவில் 62 கனேடிய அதிகாரிகள் உள்ளனர். அந்த எண்ணிக்கையை 41 ஆக குறைக்க வேண்டும் என்று இந்தியா கூறியதாக அந்த ஊடகச் செய்தி கூறியுள்ளது. இந்தக் கருத்து கூறித்து இந்திய மற்றும் கனேடிய வெளியுறவு அதிகாரிகள் உடனடியாக பதில் அளிக்கவில்லை. முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “கனடாவில் இந்திய தூதர்களுக்கு எதிராக பாதுகாப்பற்ற நிலவியது. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளின் இருப்பு இந்தியாவை விரக்தியடையச் செய்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.