இதுதானா சித்தராமையா அரசின் துரித நடவடிக்கை?

கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்கா மாவட்டம் ஹோசதுர்கா பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் ஆசிரியராக இருப்பவர் சாந்தமூர்த்தி. இவர், கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது புதிய அரசை விமர்சித்து சமூக ஊடக தளத்தில் ஒரு செய்தியைப் பகிர்ந்ததற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர், கர்நாடக அரசு அறிவித்த இலவசங்களால் அரசுக்கு ஏற்படும் மிகப்பெரிய நிதிச்சுமை குறித்து ஒரு பதிவைப் பகிர்ந்தார். உடனேயே இவருக்கு இந்த சஸ்பெண்ட் உத்தரவு அனுப்பப்பட்டது. சித்தராமையா முதல்வராக பதவியேற்ற அன்றே மாநிலத்தின் சிவில் சர்வீசஸ் நடத்தை தரத்தை மீறியதாகக் கூறி இந்த உத்தரவு அனுப்பப்பட்டதாகவும் சாந்தமூர்த்தி மீதான நடவடிக்கை குறித்து துறை ரீதியான விசாரணைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. “எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்தபோது மாநிலத்தின் கடன் சுமை 3,590 கோடியாக இருந்தது. தரம் சிங், எஸ்.டி குமாரசாமி, பி.எஸ் எடியூரப்பா, சதானந்த கௌடா மற்றும் ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இந்த கடன்கள் முறையே 15,635 கோடி, 3,545 கோடி, 25,653 கோடி, 9,464 கோடி மற்றும் 13,464 கோடியாக இருந்தது. ஆனால், சித்தராமையா ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் கடன் 2,42,000 கோடியைத் தொட்டது. அதனால்தான் அவர் இலவசங்களை அறிவிக்க வேண்டும்” என்று அவர் அந்த பதிவில் கூறியிருந்தார்.