இதுதான் கம்யூனிஸ் கட்சியா?

பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவருக்காக போராடுவதாக கம்யூனிஸ்ட் கட்சிகள், தங்கள் உதட்டளவில் சொல்லி வருகின்றன. ஆனால்,  உண்மை நிலை அப்படியல்ல என்பது பல காலமாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் மலையாள மனோரமா நாளிதழுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த யெச்சூரி, பட்டியலினத்தவரை அவர்களின் உயர்மட்ட அமைப்பான பொலிட்பீரோவில் சேர்க்கத் தவறியதற்கு  ஹிந்து சமூக அமைப்பின் மீது பழி சுமத்தியுள்ளார்.

“வரலாற்றுக் காரணங்களுக்காக சி.பி.எம்முக்கு அதன் பொலிட்பீரோவில் பட்டியலின உறுப்பினர்கள் இல்லை. இது நீண்ட காலத்திற்கு முன்பே தீர்த்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இது சி.பி.எம்முக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. நமது சமூகம் எப்போதுமே சுரண்டல் தன்மை கொண்டது. உயர் ஜாதியினருக்கு மட்டுமே அறிவு மற்றும் கல்வியை அணுகும் உரிமை இருந்தது. அதனால் அவர்கள் இயல்பாகவே புதிய யோசனைகளை செயல்படுத்துவார்கள்.

சி.பி.எம் ஒரு ஜாதிய அமைப்பு அல்ல. அவர்களை நாங்கள் பட்டியலினத்தவராகப் பார்க்கவில்லை; பட்டியலின கம்யூனிஸ்டுகளாகப் பார்க்கிறோம். ஜாதி அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தை விட கம்யூனிஸ்டாக இருப்பது முக்கியம். சி.பி.எம்மில் உயர்ஜாதி ஆதிக்கம் வெளிப்படையாக முடிவுக்கு வரும். எங்கள் பொலிட்பீரோவில் இரண்டு பெண்கள், இரண்டு முஸ்லிம்கள், ஒரு கிறிஸ்தவர் உள்ளனர்” என்று மழுப்பினார்.

ஆனால், அந்த இரண்டு பெண் உறுப்பினர்களும் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்பது சுட்டிக்காட்டப்பட்டபோது, ​​ “அதற்கு காரணம் சரித்திரம். அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம்” என்று சமாளித்தார் யெச்சூரி. உண்மையில், சி.பி.எம்மின் முதல் பெண் பொலிட்பீரோ உறுப்பினரான பிருந்தா காரத், 2005ல் அவரது கணவர் பிரகாஷ் காரத் பொதுச் செயலாளராக ஆனபோது உள்ளே நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.