நமது அண்டை நாடான வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான பங்களாதேஷ் அவாமி லீக்கைச் சேர்ந்தவர்களும் அதன் பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து ஹிந்துக்களையும், ஹிந்து மத சம்பிரதாயங்களையும், ஹிந்துக்களின் தெய்வங்களையும் அவதூறு செய்து வருகின்றனர்.
ஷேக் ஹசீனா தாராளவாத மற்றும் மதச்சார்பற்ற எண்ணம் கொண்டவர் என்ற போலியான பிம்பத்தை காட்டி உலகை ஏமாற்றினாலும், அவரது ஆட்சியின் கீழும் அவரது அரசியல் கட்சி உறுப்பினர்களாலும் அங்குள்ள ஹிந்துக்கள் தொடர் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் உள்ளன. அவ்வகையில், அவாமி லீக் கட்சியின் மௌல்விபஜார் 1வது வார்டு செயலாளராக உள்ள ஜோசிம் மியா என்பவர், கடந்த வாரம், கிருஷ்ண ஜெயந்தியின்போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி அவதூறான கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பி இழிவு செய்துள்ளார்.
இது அங்குள்ள ஹிந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. சமூக வலைதளப் பயனாளிகள், ஹிந்துக்கள் பலரும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர் மீது மவுல்விபஜார் மாடல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜோசிம் மியாவை காவல்துறையினர் கைது செய்தனர்.
இருப்பினும், சிறுபான்மை சமூகத்தின் தெய்வத்திற்கு எதிராக கேவலமான கருத்துக்களை வெளியிட்டு மத உணர்வுகளை புண்படுத்திய அவரை, ஷேக் ஹசீனா தனது அவாமி லீக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. இப்படி அவதூறு கருத்துக்களை வெளியிட்டது ஜோசிம் மியா மட்டுமல்ல. அவாமி லீக் கட்சியின் மற்றொரு தலைவரான இத்ரிஸ் அகமதுவும் அவதூறு கருத்துகளை சமூக உடகங்களில் பதிவிட்டார். ஆனால், அவர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தகவல்கள் இல்லை.
நூபுர் சர்மா, டி ராஜா சிங் போன்ற பா.ஜ.கவின் முன்னாள் தலைவர்கள் முஸ்லிம் சமூகத்தை புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி கடுமையாக கொந்தளித்து வரும் பல முஸ்லிம் அமைப்புகளும் கட்சியினரும் இது போன்றவர்களின் செயல்பாடுகளுக்கு எந்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்யவில்லை என்பதே அவர்களின் நடு நிலைத்தன்மை, மத சார்பின்மை போன்றவை என்ன என்பதை எடுத்துக்காட்டுகிறது.