கொரோனா பரிசோதனைக்கு கூடுதல் கட்டணமா?

பொதுமக்களின் கொரோனா தொற்றை உறுதிப்படுத்தும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டணத்தை குறைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசால் பரிந்துரைக்கப்படும் தனியார் ஆய்வு கூடங்களில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழான கட்டணம் 800 ரூபாயில் இருந்து 550 ரூபாயாகவும் குழு மாதிரிகளுக்கு 600 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இல்லாதவர்களுக்கு 1,200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கே நேரடியாக வந்து பரிசோதனை செய்ய கூடுதலாக, 300 ரூபாய் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம். தனியார் ஆய்வகங்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் பெறுவது குறித்து, பொதுமக்கள், 1800 425 3993 அல்லது 104 என்ற கட்டணமில்லா தொலைபேசியில், 24 மணி நேரமும் புகாரளிக்கலாம். புகார்கள் நிரூபிக்கப்பட்டால் குறிப்பிட்ட ஆய்வகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.