டெல்லியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர் உயிரியல் ஆய்வு மையம் தற்போது கொரோனா தொடர்பான பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து இருமுறை உருமாற்றம் அடைந்த இந்திய வகை கொரோனா வைரஸை சமீபத்தில் கண்டுபிடித்தது இந்த ஆய்வு மையம்தான். தற்போது அந்த மையம், வெளிநாட்டு பயணிகள் மூலமாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகிறதா என கண்காணிக்கிறது. அதன்படி, தற்போது மேற்கு வங்கத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ், மூன்று முறை உருமாறியுள்ளது என செய்திகள் வருகின்றன. இதனை ‘பெங்கால் வைரஸ்’ என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். ‘இந்த வகை கொரோனா வைரஸ், மிக ஆபத்தானது. அதிகத் தொற்றுத்தன்மை வாய்ந்தது. ஒரு நபரின் நோய் எதிர்ப்பு சக்தி கண்காணிப்பில் இருந்தும் இந்த வைரஸ் தப்பிவிடும் திறன் கொண்டது என கூறப்படுகிறது. இது சம்பந்தமான அடுத்த ஆய்வு முடிவுகள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. அதேசமயம், இதை உறுதிப்படுத்தவோ, மறுக்கவோ வேறு கூடுதல் ஆய்வுகள் எதுவும் செய்யப்படவுமில்லை. ஏற்கனவே, கொரோனாவால் நாடு முழுவதும் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்த சூழலில், மும்முறை உருமாறிய இந்த பெங்கால் வைரஸ் குறித்த செய்திகள் புது அச்சத்தை கிளப்பி வருகிறது.