அரசு மௌன பார்வையாளரா?

தேசிய தலைநகர் டெல்லியில், பஜன்புரா பகுதியில் ஹசன்பூர் டிப்போவை ஒட்டிய சாலையில் ஒன்று மற்றும் பஜன்புராவில் உள்ள வஜிராபாத் சாலையில் இரண்டு என ‘மஜார்’ எனப்படும் முஸ்லிம் மதக்கட்டமைப்புகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளன. இதை அகற்றக்கோரி எஸ்.டி விண்ட்லேஷ் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது, தனி நபர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தார். இவ்வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ‘இதுபோன்ற பிரச்னைகளில் அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு இதுபோன்ற விஷயங்களில் மௌன பார்வையாளராக மட்டுமே இருக்க முடியாது. நடுரோட்டில் இதுபோன்ற கட்டமைப்புகள் இருந்தால் நாகரீக சமுதாயம் எப்படி வாழமுடியும்? அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து இவற்றை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இதுபோன்ற ஆக்கிரமிப்புகளை பொறுத்துக் கொள்ள மாட்டோம், அவை உடனடியாக அகற்றப்படும் என்ற தெளிவான செய்தியை இதுபோன்ற அனைத்து ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அனுப்ப வேண்டும்’ என தெரிவித்துள்ளது.