வஞ்சிக்கப் படுகிறதா தமிழகம்?

மத்திய பாஜக அரசு,  மிகவும் குறைவான தடுப்பூசிகளையே,  தமிழகத்திற்கு வழங்குகின்றது என, மாநில திமுக அரசு மத்திய அரசை தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனது. மத்திய அரசு சரியான முறையில், அனைவருக்கும், எல்லா மாநிலத்திற்கும், சரி சமமாகவே, தடுப்பூசி வழங்கி வருகின்றது. ஆனால், தொடர்ந்து மத்திய அரசை, தி.மு.க.வினர் குற்றம் சொல்வதற்கு காரணம் என்ன? என்பதை பார்க்கும் போது, தங்களுடைய தவறை மறைக்க, மற்றவர்கள் மீது பழி போட்டு தப்பிக்க முயல்கின்றனர், என்ற எண்ணமே ஏற்படுகின்றது.

குறைவான தடுப்பூசியை தருகின்றதா மத்திய அரசு?

மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், பாஜக ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்திற்கு, அதிக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், அகில இந்திய அளவில், மத்திய அரசு அதிகமான தடுப்பூசிகளை வழங்கியது மகாராஷ்டிராவிற்கு.

இந்தியா அபார சாதனை:

நமது நாட்டில் “கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி” என்ற மூன்று தடுப்பூசிகள், நாடு முழுவதும் முழுவீச்சில் போடப் படுகின்றது.

ஜனவரி 16, 2021 ஆரம்பித்த தடுப்பூசி பயன்பாடு மே 26, 2021 வரையில் உள்ள நாட்களில், இதுவரை 20 கோடியே 6 லட்சத்து 62 ஆயிரத்து 456 தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இதில், 15 கோடியே 71 லட்சத்து 49 ஆயிரத்து 593 பேருக்கு முதல் டோசும், 4 கோடியே 35 லட்சத்து 12 ஆயிரத்து 863 பேருக்கு இரண்டாவது டோசும் போட்டு உள்ளனர்.

20 கோடி பேருக்கு தடுப்பூசி டோசுகளை மிக விரைவில், மனிதர்களுக்கு செலுத்திய நாடுகளின் வரிசையில், இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளது. அமெரிக்கா, 120 நாட்களில் இந்த மைல்கல்லை எட்டியது.

வளர்ந்த நாடுகள் என அழைக்கப்படும், இங்கிலாந்தில் 168 நாட்களில் 5.1 கோடி தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது.

பிரேசிலில் 128 நாட்களில் 5.9 கோடியும், ஜெர்மனியில் 149 நாட்களில் 4.5 கோடி என குறைவான எண்ணிக்கையிலேயே, தடுப்பூசி போட்டு உள்ளனர்.

இதன் மூலமாக, நமது நாட்டில்,  குறைந்த நாட்களில் எவ்வளவு வேகத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

தடுப்பூசி கொள்முதல்:

இதுவரை மத்திய அரசு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சேர்த்து, மொத்தமாக 22 கோடியே 59 ஆயிரத்து 880 டோஸ் தடுப்பூசிகளை விநியோகித்து இருக்கின்றது.

இதில், வீணானவை உள்பட மொத்தம் 20 கோடியே 13 லட்சத்து 74 ஆயிரத்து 636 டோஸ்கள் பயன்படுத்தி இருப்பதாகவும், மீதம் உள்ள ஒரு கோடியே 77 லட்சத்து 52 ஆயிரத்து 594 டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

அடுத்த சில நாட்களில், மேலும் 11 லட்சத்து 42 ஆயிரத்து 630 டோஸ் தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரேதசங்களுக்கும் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

அதிகம் வீணாக்கும் மாநிலங்கள்:

நாட்டிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தில் தான் 37.3% என அதிகமான தடுப்பூசி டோஸ்கள் வீணாக்கப் படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, சட்டீஸ்கரில் 30.2 % டோஸ்களும், தமிழகத்தில் 15.5 %  டோஸ்களும், வீணாக்கப் படுகின்றது. சராசரியாக நாடு முழுவதும் வீணாக்கப் படும் தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 6.3 %.

முதல் மூன்று இடத்தில் இருக்கும் மாநிலங்களை பார்த்தாலே, பாஜக ஆளாத மாநிலங்கள் என்பது தெரிய வரும். இதன் மூலமாகவே,  தடுப்பூசியை எந்த அளவிற்கு, அந்த மாநிலத்தில் உள்ள மக்களுக்கு செலுத்தாமல், வீணாக்குகின்றனர் என்பது தெரிய வருகின்றது.

நாட்டிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளான மாநிலங்களில், தமிழகம் 4வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் மே 26, 2021 ஆம் தேதி மட்டும் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, 33 ஆயிரத்து 764 பேர்.

இதுவரையில் தமிழகத்தில் மட்டும், 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 பேருக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

தடுப்பூசி போட்ட மாநிலங்களில் தமிழகம் 11வது இடத்தில் தான் இருக்கின்றது. இதுவரையில், தமிழகத்தில் 78 லட்சத்து 16 ஆயிரத்து 249 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மாநில மக்கள் தொகையில் ஒப்பிடும் போது, இது வெறும் 7.22 சதவீதம் மட்டுமே.

குஜராத்தில் 16.95% மக்களுக்கும்,

கர்நாடகாவில் 14.43 % மக்களுக்கும், தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

ஒரு மாநிலத்தில் எந்த அளவிற்கு வேகமாக தினமும் தடுப்பூசி செலுத்துப் படுகின்றதோ, அதற்கு ஏற்ற வகையில், மாநிலங்களுக்கு தடுப்பூசிகள்  ஒதுக்கீடு செய்யப்படும்.

தடுப்பூசிக்கு எதிராக சந்தேகம் கிளப்பிய கட்சிகள்:

தடுப்பூசிக்கு எதிராக சில அரசியல் கட்சிகள், தவறான பிரச்சாரத்தை முன் வைத்தன. மேலும் தடுப்பூசிக்கு எதிராக, அவதூறுகளை அள்ளி வீசினர்.

கோவேக்சினுக்கு எதிராக எந்த அளவிற்கு அவதூறுகளை அள்ளி வீசினார்களோ, அந்த அளவிற்கு, அந்த மருந்து, உலக நாடுகளால் தற்போது, பாராட்டப்பட்டு வருகின்றது.

பிரபல நடிகர் ஒருவர் மரணம் அடைந்தது, தடுப்பு ஊசி போட்டதால் தான் என நடிகர் மன்சூர் அலிகான் சம்பந்தப்படுத்தி பேசினார். அவரை நீதிமன்றமும் கண்டித்தது.

துரித நடவடிக்கை எடுத்த மத்திய அரசு:

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப் படி, மார்ச் 31, 2020 முதல் மார்ச் 31, 2021 வரை கொரோனா முதல் அலையால், உலக அளவில் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 20 லட்சம்.

கொரோனா  2-வது அலை உள்ள ஏப்ரல் 1, 2021 முதல் மே 19, 2021 வரையில் உள்ள 49 நாட்களில், பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 31 லட்சம்.

நமது நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டு மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை, ஒரு லட்சம் பேரில் 21. அமெரிக்காவில் – 181, பிரான்சில் – 166, இங்கிலாந்தில் – 195, இத்தாலியில் – 209, ஸ்பெயினில் – 171, ஜெர்மனியில் – 106.

நிச்சயமாக, மரணம் என்பது துயரமான சம்பவம். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே, நம் அனைவரின் எண்ணமாகவும் இருக்கும். ஆனால், உலக அளவில் ஒப்பிடும் போது, நமது மத்திய அரசின் சிறப்பான செயல்பாட்டால், மரண எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது என்பதை, இந்த புள்ளி விவரங்கள்  நமக்கு தெளிவாக உணர்த்துகின்றது.

மத்திய அரசு, சுகாதார துறைக்காக 137 % பணத்தை அதிகமாக, நிதி ஆண்டில் ஒதுக்கி உள்ளது. 2014 ஆம் ஆண்டு, நமது நாட்டில் உள்ள மொத்த எய்ம்ஸ் மருத்துவமனையின் எண்ணிக்கை, வெறும் ஆறு மட்டுமே. தற்போது  நாடு எங்கிலும், 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளன.

அது போலவே, 381 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, தற்போது 565 ஆக, மத்திய பாஜக அரசால் உயர்த்தப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு நிதி பட்ஜெட்டின் போது, தடுப்பு ஊசி செலவுகளுக்கு மட்டுமே 35 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. சுகாதாரத் துறைக்கு என 2 கோடியே 23 லட்சம் ரூபாய், மத்திய பாஜக அரசால் ஒதுக்கப் பட்டது.

இரண்டாவது கொரோனா அலையில், ஆக்சிஜன் தேவை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது, என்பதை உணர்ந்த மத்திய அரசு, ஆகஸ்ட் 2020ல் நமது நாட்டின் ஆக்ஸிஜன் உற்பத்தி, 5700 மெட்ரிக் டன்னாக இருந்ததை, மே 2021ல், 9 ஆயிரத்து 446 மெட்ரிக் டன்னாக, தினசரி உற்பத்தியை அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு ஒரு மக்களவை உறுப்பினரும் இல்லாத சூழ்நிலையிலேயும், தமிழகத்திற்கு அதிக நிதியை ஒதுக்கியதுடன், எங்கு சென்றாலும் தமிழ் மொழியின் பெருமைகளை பேசி வருகிறார் பாரத பிரதமர் மோடி அவர்கள்.

வாட்சப் எண்:

நமது வீட்டிற்கு அருகாமையில், எங்கு தடுப்பூசி போடப்படுகிறது, என்ற விவரத்தை நமது தொலைப் பேசியிலேயே, நாம் அறிந்து கொள்ள, மத்திய அரசு புதிய வாட்ஸ் அப் எண்ணை உருவாக்கி இருக்கின்றது.

+91 90131 51515 என்ற எண்ணிற்கு நமது அஞ்சல் குறியீட்டை (Pin Code) அனுப்பினால், நமது வீட்டிற்கு அருகாமையில், எங்கு தடுப்பூசி போடப்படுகிறது என்ற விவரத்தை உடனே நமக்கு தெரிவிக்கும். இந்த வசதியை பயன்படுத்திக் கொண்டு, நாம் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

பிரதமரையும், மத்திய அரசையும் இழிவு படுத்தும் நோக்கில், தேவையில்லாமல் விமர்சனம் செய்து வருகின்றனர் சிலர்.  உண்மை நிலையை உணர்ந்தாலே, மத்திய அரசு எந்த அளவிற்கு, தமிழக அரசிற்கு அனுகூலமாக உள்ளது என தெரிய வரும். தற்போது கூட, அதிக தடுப்பூசிகளை மாநில அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மத்திய அரசு, உடனே அதிகமாக கொடுத்தது.

தமிழகத்திற்கு, மத்திய அரசு என்றும் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதனை மாநில அரசு உணர்ந்து, மத்திய – மாநில அரசுகள், இணைந்து பணி செய்தாலே, நிச்சயமாக நாம் கொரோனாவை வெல்ல முடியும்.

ஒன்று படுவோம்..!! வென்று காட்டுவோம்..!!!

 

–  அ.ஓம்பிரகாஷ், Centre for South Indian Studies, Chennai