தமிழக பா.ஜ.க சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா கருத்தரங்கம் சென்னை தாம்பரத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்டதமிழக் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில், “தேசிய புலனாய்வு அமைப்பும் மாநில காவல் துறையும் இணைந்து நாடு முழுதும் சோதனை நடத்தி ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ எனும் பி.எப்.ஐ. அமைப்பை சேர்ந்த 105 பேரை கைது செய்துள்ளன. தமிழகத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இரு தினங்களாக பா.ஜ.க தொண்டர்கள் அவர்களின் சொத்துக்கள் பா.ஜ. அலுவலகங்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளன. தமிழகம் அமைதி பூங்காவாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் தேச விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பெட்ரோல் குண்டு வீச்சை ஏற்க முடியாது. இதற்கு பா.ஜ.க தொண்டர்கள் பதிலடி கொடுக்க ஆரம்பித்தால் என்னவாகும் என்பதை தமிழக அரசு நினைத்து பார்க்க வேண்டும். தேசத்திற்கு எதிராக இருக்கக் கூடிய சக்திகளை கட்டுக்குள் கொண்டு வர பா.ஜ.க தொண்டர்களுக்கு அரை மணி நேரம் போதும். ஆனால் பா.ஜ.க அமைதியை விரும்பும் கட்சி. காவல்துறையை நம்பக்கூடிய கட்சி. இதனால் தான் பா.ஜ.க நிர்வாகிகள் டி.ஜி.பி.யை சந்தித்து மனு அளித்துள்ளனர். தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரிவினைவாத சக்திகளை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். பெட்ரோல் குண்டு வீசி மூன்று நாட்களாகியும் ஒருவரை கூட கைது செய்யப்படவில்லை. இதுகுறித்து கோவையில் அறப்போராட்டம் நடத்தப்படும். இது அரசுக்கு எச்சரிக்கையாக இருக்கும். முதல்வர் காவல் துறைக்கு சுதந்திரம் அளித்து பா.ஜ.கவினர் மீது தாக்குதல் நடத்திய கயவர்களை உடனே கைது செய்ய வேண்டும்” என கூறினார்.