கர்நாடகாவில் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் தொடுத்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், “ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமான வழக்கம் அல்ல. எனவே கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதேபோல பல்வேறு தரப்பினரும் இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “உங்களுக்கு மத உரிமை இருக்கலாம். அது சார்ந்து நீங்கள் எந்த ஒரு பழக்கத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் நீங்கள் பின்பற்றும் பழக்கங்களை மத உரிமை என்ற பெயரில் நிர்ணயிக்கப்பட்ட சீருடைப் பழக்கம் உள்ள பள்ளிக்கும் எடுத்துச் செல்வது சரியா? சட்டப்பிரிவு 25ன் படி ஹிஜாப் அணிவது அவசிய நடைமுறையா என்பதை வேறுவிதமாகவும் அணுகலாம். அரசு கல்வி நிலையங்களில், மத அடையாளங்களைப் பின்பற்றுவதை வலியுறுத்த முடியுமா? நம் அரசியல் சாசன முன்னுரையிலேயே நமது தேசம் மதச்சார்பற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளதே?” என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு மற்றும் எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் பதில் அளித்ததைத் தொடர்ந்து வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.