ஹிந்துவாக இருப்பது பாவமா?

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான “ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்” படம் குறித்த விமர்சனத்தின்போது, திரைப்பட விமர்சகர் அனுபமா சோப்ரா, தனது மதிப்பாய்வில் நம்பி நாராயணனை இந்தப் படத்தில் ஒரு ஹிந்துவாகக் காட்டுவதற்கு தனது ஆட்சேபனையை வெளிப்படுத்தினார். அவரது விமர்சனத்தில், “இந்தத் திரைப்படம் நாராயணனின் பல சாதனைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது பாராட்டத்தக்கது. ஆனால் திரைக்கதை அவரது தேசபக்தியை மீண்டும் மீண்டும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அவரது ஹிந்து மதத்தின் மீது முனைப்பாக உள்ளது. நம்பி நாராயணனின் முதல் காட்சியே அவரது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருந்துதான் துவங்குகிறது. படத்தில் முக்கியமான தருணங்களில் அவர் பிரார்த்தனை செய்கிறார். நாராயணன் ஒரு உண்மையான நீல ஹிந்து தேசபக்தர்” என விமர்சித்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், டெக்கான் வாஹினிக்கு பேட்டியொன்றில், “நம்பி நாராயணன், கோயில் உற்சவம், சுப்ரபாதம் என்று எல்லாவிதமான ஹிந்துமத விஷயங்களையும் செய்து வருகிறார். நம்பி நாராயணனை ஹிந்துவாகக் காட்டுகிறார்கள். அவர் ஒரு பிராமணர். படத்தில் ஹிந்துத்துவா காட்டப்படுகிறது என்று ஒருவர் விமர்சனம் எழுதியுள்ளார். இது வேடிக்கையாக உள்ளது. நான் ஒரு ஹிந்து. அப்படிச் சொல்வதில் எனக்கு வெட்கமில்லை. ஹிந்துவாக இருப்பது பாவமா? நான் ஹிந்துவாக இருக்கும்போது, ​​என் கதையை படமாக்கினால் அதில் என்னை ஹிந்துவாகத்தான் காட்டுவார்கள். அவர்கள் என்னை முஸ்லீம் என்றோ கிறிஸ்தவர் என்றோ காட்ட முடியாது. அப்படியானால் நாம் எதைப் பற்றி பேசுகிறோம்? பிராமணராக இருப்பது பாவமா? நான் பிராமணர் இல்லை என்பது வேறு விஷயம். அந்த இடத்தில் ஒரு பிராமண தோழன் இருந்தால், நீங்கள் அவரது கதாபாத்திரத்தை வெட்டிவிடுவீர்களா? இந்த நாட்டிற்காக உயிரைக் கொடுத்த எத்தனையோ பிராமணர்கள் இருக்கிறார்கள். அதற்கு நான் உங்களுக்கு ஒரு பெரிய பட்டியலே கொடுக்க முடியும். நாங்கள் தேவையில்லாமல் பிரச்சினைக்கு சாயம் பூச முற்படுகிறீர்கள்” என கண்டித்துள்ளார்.