எதிர் கட்சியாக இருந்தபோது இறந்துவிட்ட தனது தந்தை கருணாநிதியின் உடலை புதைக்க மெரினா கடற்கரையில் இடம் கேட்டு ஸ்டாலின் குடும்பத்தினர் அன்றைய முதல்வர் எடப்பாடியாரை சந்தித்தது, வழக்கை வாபஸ் பெற்றது உள்ளிட்ட முயற்சிகள், ஆளும் கட்சியாகிவிட்ட பிறகு மக்களின் வரிப்பணத்தை கொட்டி, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, கடலில் 81 கோடியில் பேனா நினைவுச்சின்னம் அமைக்க எடுத்து வரும் பகீரத பிரயத்தனங்கள் போன்றவற்றுக்கு மத்தியில் மற்றொரு மாநில முதல்வர் மக்கள் நலனுக்காக தனது தந்தையின் நினைவிடத்தை அகற்ற உத்தரவிட்டு நாட்டையே திரும்பப் பார்க்க வைத்துள்ளார். ஒடிசா மாநிலத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொண்டு வரும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், உலகப்புகழ் பெற்ற பூரி நகரின் வளர்ச்சிக்காக தனது தந்தையின் சமாதியை அகற்ற உத்தரவிட்டு ஒடிசா மட்டுமின்றி நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளார். நவீன் பட்நாயக்கின் தந்தையான பிஜூ பட்நாயக் கடந்த 1997ம் ஆண்டு காலமானார். அவரது உடல் புரி நகரில் உள்ள ஸ்வர்கத்வார் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அந்த மயானத்திலேயே அவருக்கு பிரம்மாண்ட நினைவிடம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புனித யாத்திரை நகரான புரி நகரை மேம்படுத்தவும், அந்த மயானத்தை அழகுபடுத்தவும் மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கான திட்டத்தை செயல்படுத்த பிஜூ பட்நாயக்கின் நினைவிடம் தடையாக இருந்தது. அந்த நினைவிடம் மயானத்தின் பெரும்பாலான இடத்தை பிடித்திருந்தது.
இதை அறிந்த நவீன் பட்நாயக், தனது தந்தையின் நினைவிடத்தை அகற்றுமாறு உத்தரவிட்டு உள்ளார். தற்போது அந்த இடத்தில் நினைவிடத்திற்கு பதிலாக அவருடைய பெயர் பலகை மட்டுமே உள்ளது. இதை அவரது தனிச்செயலாளரும், 13 ஆண்டுகளாக அவருடன் நெருக்கமாக இருந்து வருபவருமான வி.கே பாண்டியன், துபாயில் ஒடியா புலம்பெயர்ந்தோர் மத்தியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். இது குறித்து கேட்டபோது “எனது தந்தை கல்லில் வாழவில்லை மக்களின் இதயங்களில் வாழ்கிறார்” என நவீன் பட்நாயக் கூறியதை எடுத்துரைத்தார். நகரின் வளர்ச்சிக்காக தனது தந்தையின் சமாதியை நவீன் பட்நாயக் அகற்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் என்பதையும் தாண்டி, எழுத்தாளரான நவீன் பட்நாயக் 3 புத்தகங்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். தனது தந்தையான ஓடிசாவின் முன்னாள் முதல்வர் பிஜூ பட்நாயக்கின் மறைவுக்கு பிறகு 1997ம் ஆண்டு அரசியலில் அடியெடுத்து வைத்த அவர், மக்கள் மனதில் ‘மிஸ்டர் க்ளீன்’ என்ற தகுதியுடன் சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார்.