மூடப்படுகிறதா காந்திமதி மேல்நிலைப்பள்ளி?

ஹிந்து சமய அறநிலையத்துறையின் சார்பில், நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் நடத்திவரும் பாளையங்கோட்டை, காந்திமதி மேல்நிலைப்பள்ளி, கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. ஆதரவற்ற மாணவ மாணவியர்கள் இங்கு உள்ள ஆதரவற்றோர் கருணை இல்லத்தில் தங்கி படித்து வருகின்றனர். ஆனால், தற்போது இப்பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான தொடக்கக் கல்வியில் மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் மாணவர் சேர்க்கையை நிர்வாகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதரவற்றோர் இல்லத்திலும் மாணவ மாணவியர் சேர்க்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வரும் பள்ளியை நிர்வகிக்க இயலாமல் மூடுவதற்கு அறநிலையத்துறை முயன்று வருவது மிகுந்த கண்டனத்துக்குரியது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், ஹிந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல புதிய பள்ளிகளை உருவாக்குவோம் என கூறிய அறநிலையத்துறை அமைச்சர், இதனை மீண்டும் திறந்து நடத்த ஆவன செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் பெற்றோர்கள் அரசுக்கு வைத்துள்ளனர்.