தமிழ் மாநில முஸ்லிம் லீக் கட்சி தலைவர் ஷேக் தாவூத் அளித்த பேட்டியில் சிறுபான்மைக்கு எதிராக திமுக இருப்பதாகவும், ஏமாற்றுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். நெறியாளர் ஒருவர், ‘திமுக.,வின் திராவிட மாடல் ஆட்சியில் தான் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கின்றனர் எனவும், பா.ஜ., வந்தால் அவர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என கூறி வருவதாக’ தெரிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஷேக் தாவூத், ‘அப்படி பார்த்தால் உத்தரப் பிரதேசத்தில் அவ்வளவு இஸ்லாமியர்கள் உள்ளனர்.அவர்கள் எல்லாம் பாதுகாப்பு இல்லாமல் ஓடிபோய்விட்டார்களா?அதேபோல் மற்ற மாநிலங்களில் உள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்களா? இது, இந்தியா என்பதும், சட்டத்தின் ஆட்சி என்பதும் உங்களுக்கு (திமுக.,வுக்கு) நினைவில்லையா? ஜனநாயகம் என்பது உங்கள் நினைவில் இல்லையா?இவர்கள் தான் பாதுகாப்பு, அவர்கள் தான் பாதுகாப்பு என பேசுவதே குற்றம். இவர்கள் வந்தால்தான் நாங்கள் (சிறுபான்மையினர்) பாதுகாப்பாக இருக்கிறோம் எனில், இவர்கள் வரவில்லை என்றால் இந்தியாவிலேயே இருக்க முடியாதா?அப்போ நாங்கள் எல்லாம் இந்தியர்களே இல்லையா? இந்தியராக இருந்தால் திமுக.,விற்கு ஓட்டுப்போட வேண்டும், திமுக.,வை ஆதரிக்க வேண்டும் என சொல்கின்றீர்களா? இதுபோன்று பேசுவதே ஜனநாயகம் இல்லை என்பேன்.இது ஜனநாயகத்துக்கு எதிரான கருத்து.இப்படியெல்லாம் பிரித்து பிரித்து பார்த்தால் ஹிந்துக்களில் குலதெய்வ வழிபாடு செய்பவர்கள் எல்லாம் ரொம்ப சிறுபான்மையினராக போய்விடுவர்.இப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் யாருமே முன்னேற முடியாது.அப்புறம் என்ன தமிழர்?இனத்தால் நாம் எல்லாம் தமிழர் என சொன்னால் அதற்கு கூட மரியாதை இல்லையா?50 ஆண்டுகளாக தமிழர்களுக்கான ஆட்சி என கூறுகின்றனர்.அப்படியெனில் ஆட்சியில் உள்ள தமிழர்களுக்கானது மட்டும்தானா, எங்களை போன்ற தமிழர்களுக்கு இல்லையா?ஜனநாயகத்தின்படி பேசுங்கள், அல்லது தமிழர்கள் ஆட்சி என பேசுங்கள் அல்லது திராவிட மாடல் ஆட்சி என பேசுங்கள்.இதுபோன்ற புனைப்பெயரை சூட்டுவதால் என்ன கிடைத்திடப்போகிறது? நம்மளை நாமே ஏமாற்றிக்கொள்வதா! வணக்க வழிபாடு நடத்தினால் தமிழர் இல்லை என ஏமாற்றுகின்றனர்.இப்தார் விருந்துக்கு வந்தால் தொப்பியுடனும், கிறிஸ்தவ நிகழ்ச்சியில் நானும் கிறிஸ்தவன் தான் எனவும் ஏமாற்றுகின்றனர்.எங்களை தமிழர்களாகவே வாழவிட மாட்டீர்களா?என் தாய்மொழி தமிழ்; நானும் தமிழன் என சொல்லிக்கொண்டாலும் கேட்பதில்லை.தேவாலயம், மசூதி செல்பவர்கள் தமிழன் இல்லை என்றாவது சொல்லுங்கள்.நல்ல ஆட்சியை கொடுங்கள், தமிழ் மக்களை முன்னேற்றுங்கள்.எல்லா தமிழர்களுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுங்கள்.ஒரு குடும்ப ஆட்சியோ அல்லது ஒருசாரர் மட்டும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது வேண்டாம். ஜனநாயக முறைப்படி மக்களுக்கு நல்லது செய்பவர்கள் மாறி மாறி வரட்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது நெறியாளர், ‘இது ஈ.வெ.ரா மண், திராவிட மண்; இங்கு பா.ஜ., காலூன்ற முடியாது என கூறுகின்றனர்’ கேள்வி எழுப்பினார். அதற்கு ஷேக் தாவூத், ‘மத்தியில் பா.ஜ., ஆட்சியை ஏற்றுக்கொள்ளும்போது, தமிழகத்தில் தமிழரான அண்ணாமலை முதல்வராக வந்தால் என்ன? ஆனால் பா.ஜ.,வை புலி, சிங்கம், கரடி என கூறி ஏன் மக்களிடம் பயத்தை கொண்டு வருகிறீர்கள்? மத்திய அரசிடம் பேசும்போது அந்த பயம் இல்லையா? திராவிட கட்சிகள் மாறி மாறி பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்தால், அது நல்லக்கட்சி; ஆனால் தனியாக வந்தால் கடித்துவிடும் என்பது போல பேசுகின்றனர். ஜனநாயக நாட்டில் ஒரு சமுதாயத்தை ஏன் பயமுறுத்துகிறீர்கள்?’ இவ்வாறு அவர் சரமாரி கேள்வி எழுப்பினார்.சில ஊழல் பத்திரிகையாளர்கள் இதுபோன்ற அரசியல் தலைவர்களை கேள்வி கேட்கும்போது ஒருதலைபட்சமாகவே கேட்கின்றனர்.அதிலும் பெரும்பாலானோர் திமுக ஆதரவு பத்திரிகையாளராகவும், நெறியாளராகவும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். (நன்றி: தினமலர்)