உலக வங்கித் தலைவராவாரா அஜய் பங்கா?

உலக வங்கியின் தலைவராக பதவி வகித்து வரும் டேவிட் மல்பாஸ், தனது பதவி முடிவதற்கு ஒரு வருடத்திற்கு முன்னர் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பாரத வம்சாவளியை சேர்ந்தவரான அஜய் பங்காவின் பெயரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். அஜய் பங்கா, காலநிலை மாற்றம் உட்பட நமது காலத்தின் மிக அவசரமான சவால்களைச் சமாளிக்கப் பொது மற்றும் தனியார் வளங்களைத் திரட்டி செயல்படுவதில் அகிகப்படியான அனுபவம் கொண்டவர் என்று ஜோ பைடன் தனது அறிக்கையில் இவரைப் பற்றி பெருமையாக குறிப்பிட்டுள்ளார். வெள்ளை மாளிகை, இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுவாக உலக வங்கியின் தலைவர் அமெரிக்கராகவும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியரை நியமிப்பது தான் வழக்கம். ஆனால் இந்த முறை பாரத அமெரிக்கரான அஜய் பங்காவை உலக வங்கியை வழிநடத்த அமெரிக்க அரசு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகளின் பொருளாதாரம் மிகக் கடுமையான சவால்களை சந்தித்து வரும் தற்போதைய சூழலில், உலக வங்கியின் புதிய தலைவர் மிகவும் திறமையானவராகவும், அனைத்து சந்தைகளிலும் அனுபவம் மிக்கவராகவும் இருக்க வேண்டியது அவசியம்.

இந்த சூழலில், அஜய் பங்காவை ஜோ பைடன் பரிந்துரைத்திருப்பது என்பது, அமெரிக்காவில் இருக்கும் பாரதத்தினரும் பாரத வம்சாவளியினரும் அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள கணிசமான நேர்மறை தாக்கத்தை உணர்த்துவதாகவே உள்ளது. அமெரிக்க பரிந்துரையை அடுத்து, பல உலக நாடுகளும் நிதி அமைப்புகளும் முதலீட்டு நிறுவனங்களும் கூட இவரை நியமிக்க பரிந்துரை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக வங்கி நிர்வாகம் மார்ச் 29ம் தேதி வரை இதற்கான பரிந்துரைகளை ஏற்கும். எனினும், உலக வங்கி இப்பதவிக்கு பெண் வேட்பாளர்கள் வலுவாக ஊக்குவிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அஜய் பங்கா மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியுள்ளார். பராக் ஓபாமாவின் அதிபருக்கான ஆலோசனை குழுவிலும் இவர் பணியாற்றியுள்ளார். தற்போது உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்.