கோயில் நிதியில் முறைகேடுகள்

சென்னை மயிலாப்பூரை சேர்ந்த இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் அமைப்பின் தலைவரான டி.ஆர் ரமேஷ், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘தமிழகம் முழுவதும் உப கோயில்களுடன் சேர்த்து மொத்தம் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில் 38 ஆயிரம் கோயில்கள் ஹிந்து சமய அறநிலையத் துறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன.இந்த கோயில்களில் சுமார் 19 ஆயிரம் கோயில்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பரம்பரை அல்லாத அறங்காவலர்களை தமிழக அரசு இதுவரை நியமிக்கவில்லை.ஆனால், அறநிலையத் துறை, சட்டவிரோதமாக தனது செயல் அலுவலர்கள் மூலமாக கோயில் நிர்வாகத்தை தனது கையில் எடுத்துக்கொண்டுள்ளது. இதன் மூலம், கோயில் நிதியை சமயம், ஆன்மிகம் அல்லாத பிற பணிகளுக்கு தமிழக அரசு இஷ்டம்போல செலவிட்டு வருகிறது.கோயில்களின் பராமரிப்பு, பாதுகாப்புக்காக பக்தர்கள் அளிக்கும் நன்கொடைகள், அறநிலையத் துறை ஊழியர்களின் சம்பளம் உள்ளிட்ட பிற செலவினங்களுக்காக மடைமாற்றி விடப்பட்டுள்ளது.

கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் பல ஆண்டுகளாக  நியமிக்கப்படாததால் கோயில் நிதியில் ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் முறைகேடுகள் செய்துள்ளனர். கோயில்களின் நிர்வாகங்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.அறங்காவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டால் மட்டுமே நிர்வாக அதிகாரியை நியமிக்க முடியும்.அந்த நியமனமும், நிர்வாகம் சீரான நிலைமைக்கு வரும்வரை மட்டுமே தர்காலிகமாக இருக்க வேண்டும்.அதன்பிறகு கோயில் நிர்வாகங்கள் முழுமையாக அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.ஆனால், தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. கடந்த 70 ஆண்டுகளில் தமிழகத்தில் அறநிலையத் துறையால் கைப்பற்றப்பட்ட கோயில் நிர்வாகங்கள், அறங்காவலர்களிடமோ, சம்பந்தப்பட்ட சமூகத்திடமோ திருப்பி ஒப்படைக்கப்பட்டதாக எந்த பதிவுகளும் இல்லை. இதன்மூலம் மிகப்பெரியஅ ளவில் முறைகேடுகள் நடந்து வருகின்றன. எனவே, தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் 628 செயல் அலுவலர்களை பதவி நீக்கம் செய்து, கோயில்களுக்கு உடனடியாக அறங்காவலர்களை நியமிக்க உச்ச நீதிமன்ரன் உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கு விசாரனையின்போது, நீதிபதி சந்திரசூட், “கடந்த 2011 முதல் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லையா?” என்று கேட்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை தள்ளிவைத்தனர்.