உத்தரப் பிரதேசத்தில் பல ஆயிரம் மதரஸாக்கள் உள்ளன. அவற்றில் பல அங்கீகாரம் பெறாதவை. இவற்றில் பல்வேறு சீர்கேடுகள் உள்ளதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இவற்றை சரி செய்ய, முறைப்பட்த்த மதரஸாக்கள் அனைத்திலும் கள ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டார். அதன்படி கடந்த செப்டம்பர் 10ம் தேதி கள ஆய்வு தொடங்கியது. அதற்கு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுகள் முடிவுறும் நிலையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ‘இதில் பல மதரசாக்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்ற தகவல்களே இல்லை. பல மதரஸாக்களுக்கு எப்.சி.ஆர்.ஏ விதிகளை மீறி வெளிநாடுகளின் நிதி கிடைத்து வருகிறது. நிதியை வசூலிக்க பல தரகர்கள் செயல்படுகின்றனர். இதையே தொழிலாகச் செய்து வரும் மௌலானாக்களுக்கு சுமார் 40 சதவீதம் வரை கமிஷன் தொகை அளிக்கப்படுகிறது. சில மதரஸாக்களில் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. நிதியுதவி பெறுவதற்காகவே மாணவர்கள் அதிகமின்றி மதரசாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மதரஸாக்கள் சார்பில் உருது மற்றும் ஆங்கில மொழி பத்திரிகைகள் நடத்தப்படுகின்றன. இவற்றில் ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவச மறைக் கல்வி போதிப்பதாக கூறிக்கொண்டு தவறான, புனையப்பட்ட செய்திகள் வெளியிடப்படுகின்றன. பொதுமக்கள் கண்களில் படாமல் நடத்தப்படும் இந்த பத்திரிகைகள் ஐக்கிய அரபு நாடுகளில் நிதி வசூல் செய்ய பயன்படுத்தப்படுகின்றன’ என தெரியவந்துள்ளது. இதுகுறித்து பேசிய உ.பி. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தரம்பால் சிங், ‘‘மாநிலம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 6,436 மதரஸாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மாநில அரசின் மதரஸா பாடத் திட்டங்கள் போதிப்பதில்லை. இதுவரை 5,170 மதரஸாக்களில் கள ஆய்வு முடிந்துள்ளது. மீதியுள்ளவற்றையும் ஆய்வுசெய்வதற்கான பணி 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.