பாரதத்தை அழைக்கும் ஈரான்

ரஷ்யா போலவே மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் பல காலமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாடு ஈரான்.ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி பல வருடங்களாக விசாரணை, ஆய்வு என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.ஈரான் மீது இப்படி சர்வதேச பொருளாதாரத் தடைகள் இருந்தாலும், பாரதம் பல வருடங்களாக அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.இந்த சூழலில், தற்போது ஈரான் அரசு தனது எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகளை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது.இதனையடுத்து, ஈரான் தனது நீண்ட கால வர்த்தகக் கூட்டாளியான பாரதத்துடன் இதில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.அவ்வகையில், 2021ம் ஆண்டில் சீனாவுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தம் போலவே, ஈரான் தற்போது பாரதத்துக்கும் பல சலுகைகளை அளிக்க ஈரான் தயாராகியுள்ளது.ஈரான் சீனா இடையிலான ஒப்பந்தத்தின் விவரங்களை வெளியிடாமல் இரு நாடுகளும் ரகசியமாக வைத்துள்ளது. எனினும் இதுகுறித்து கசிந்துள்ள தகவல்களின் படி, ஈரானின் உள்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறையில் 25 ஆண்டுகால ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் 400 பில்லியன் டாலர்களை சீனா முதலீடு செய்யும். இதற்குப் பதிலாக ஈரான் அரசு, சீனாவுக்கு கச்சா எண்ணெயை நிலையான தள்ளுபடி விலையில் வழங்கும்.இதே போன்றதொரு ஒப்பந்தத்தை பாரதத்திடமும் மேற்கொள்ள ஈரான் முடிவெடுத்துள்ளது. ஈரானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி பகேரி கனி கடந்த மாதம் தனது பாரத பயணத்தின் போது அரசின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவுடன் பேசிய போது இந்த ஒப்பந்தம் குறித்த வாய்ப்பை உறுதிப்படுத்தினார். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் இத்திட்டத்தை பரிசீலித்து வருகிறது.எனினும், இந்த ஒப்பந்தம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.பாரதத்துக்கு ஏற்கனவே ரஷ்யா 40 சதவீத தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் அளித்து வருவதுடன் ரூபாய் மதிப்பில் பணப்பரிவர்த்தனைக்கும் ஒப்புக்கொண்டுள்ளது. இதேபோல ஈரானும் நீண்ட கால அடிப்படையில் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் அளிப்பதும் ரூபாய் மதிப்பில் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதும் பாரதத்தின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் என்பது திண்ணம்.