கொடைக்கானல்: அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பாஜக நடத்திய முற்றுகை போராட்டத்தில் என்னை கைது செய்யாததற்காக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
கொடைக்கானலில் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத்தை நேற்று அண்ணாமலை மேற்கொண்டார். கொடைக்கானல் நாயுடுபுரம் சித்தி விநாயகர் கோயிலில் தொடங்கி, ஏரிச்சாலை, பேருந்து நிலையம், அண்ணா சாலை வழியே மூஞ்சிக்கல் வரை அவர் நடந்து சென்றார்.
பின்னர் அவர் பேசியதாவது: தமிழக முதல்வர் குடும்பத்தினர் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். ஊழல்வாதிகளாக திகழும் திமுக, கமிஷனுக்காக கடன் வாங்கும் அரசாக உள்ளது.
இந்தியா இன்றைக்கு பாதுகாப்பாக இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது எத்தனை குண்டுவெடிப்புகள், எத்தனை தீவிரவாதிகள் நாட்டுக்குள் வந்தார்கள். ஆனால், 9 ஆண்டுகால பிரதமர் மோடி ஆட்சியில் எங்காவது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்ததா? தமிழகத்தில் திமுகவினரும், அமைச்சர்களும் மோடியை பார்த்து பயப்படுகின்றனர்.
சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பாஜக நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் என்னைக் கைது செய்யாததற்காக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர்.
என் மீதும், பாஜக மீதும் குற்றம்சாட்டும் முன்பு முதல்வர் ஒருமுறை கண்ணாடியில் பார்க்க வேண்டும். ஒரே ஒரு குடும்பத்துக்காக முதல்வர் உழைத்து வருகிறார். மகனும், மருமகனும் சம்பாதிப்பதற்காக ஆட்சி நடக்கிறது.
சனாதனம்: சிலருக்கு சனாதன தர்மம் என்றால் குழப்பம் இருக்கிறது. சனாதனம் என்பது மக்கள் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கும் தர்மம். எல்லோரையும் அரவணைத்து செல்வது சனாதனம். பாஜகவில் விவசாயி, கூலித்தொழிலாளி, சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் உள்ளனர்.
ஆனால், திமுகவில் அப்படி இல்லை. எங்கள் காலத்துக்குப் பிறகு உங்கள் குழந்தைகள் அரசியலுக்கு வர வேண்டும். அப்போது தமிழகத்தின் தலையெழுத்து மாறும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, இன்று (செப்.13) ஆத்தூர், நிலக்கோட்டை, செப்.14-ல் நத்தம், திண்டுக்கல், செப்.15-ல் வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், செப்.16-ல் பழநியில் அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்கிறார்.