பி.ஐ.பி பிரச்சாரத்தில் பங்கேற்க அழைப்பு

சுதந்திரத்தின் 75வது ஆண்டில் நாடு பயணிக்கும் நிலையில், மத்திய அரசின் தகவல் தொடர்பு பிரிவான தமிழ்நாடு பத்திரிகை தகவல் அலுவலகம் (பி.ஐ.பி), தமிழகத்தின் அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்களை பிரபலப்படுத்த சமூக ஊடக பிரச்சார இயக்கத்தை சுதந்திர தினத்திற்கு 10 நாள் முன்பாக தொடங்கி செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்த நிகழ்வின் போது பிரபலப்படுத்துவதற்காக நூற்றுக்கும் அதிகமான விடுதலைப் போராட்ட வீரர்களை அடையாளம் கண்டுள்ளது. அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த பி.ஐ.பியின் சமூக ஊடகத் தளங்களில் தொடர்ச்சியாக பிரபலப்படுத்தும் தகவல்கள் பதிவிடப்படுகின்றன. இதில், சமூக ஊடக தளங்களில் ஹாஷ்டேக் உடன் @pibchennai பிஐபி தமிழ்நாடு என்பதை டேக் (Tag) செய்து காட்சிப்பதிவு, அனிமேஷன், ஒலிப்பதிவு போன்றவற்றை பன்முக ஊடகங்களில் பதிவு செய்து பங்கேற்க பொதுமக்களுக்கு பி.ஐ.பி. அழைப்பு விடுத்துள்ளது. இதற்கான மையப்பொருட்களாக சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் அல்லது ஆசாதி கா அம்ரித் மகோத்ஸவ், தமிழகத்தைச் சேர்ந்த அறியப்படாத விடுதலைப் போராட்ட வீரர்கள் போன்ரவை இருக்கலாம். சமூக ஊடக பதிவுகளில் சிறந்தவற்றுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்தப் பதிவுகள் ஒரு விடுதலைப் போராட்ட வீரரின் கதையாக இருக்கலாம். விடுதலைப் போராட்ட வீரரின் நினைவிடம் குறித்த தகவலாகவும் இருக்கலாம். அல்லது விடுதலைப் போராட்டம் தொடர்பான முக்கிய இடங்களாகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.